அந்தியூர் அருகே காணாமல் போன 13 வயது சிறுமி மீட்பு
அந்தியூர் அருகே காணாமல் போன 13 வயது பள்ளி மாணவியை மூன்று மணி நேரத்தில் சத்தியமங்கலத்தில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று 26.10.2026, அந்தியூரில் உள்ள ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பள்ளி மாணவி காணாமல் போனதாக கிடைத்த தகவலின்பேரில், அந்தியூர் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டார். அதில், கர்நாடக மாநிலம், சென்னப்பட்டணாவைச் சேர்ந்த சுரேஷ் (45), த/பெ. ஒன்னே கவுடா, (தற்போது அந்தியூர், ஆதர்ஷ் பள்ளி வளாகத்தில் குடியிருந்துகொண்டு, விடுதியில் சமையலராகப் பணிபுரிந்து வருபவர்), 8ம் வகுப்பு படிக்கும் தனது மகள் நிவேதிதாவை ஒழுங்காக படிக்குமாறு திட்டியதால், 26.10.2026 இன்று காலை சுமார் 0905 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற நிவேதிதா, பள்ளி சீருடையில் பள்ளி நுழைவாயில் வரை சென்றவர், பள்ளிக்குள் வரவில்லை என தெரியவந்தது. இது தொடர்பாக, அந்தியூர் காவல் நிலையத்தில் குற்ற எண்.287/2026 u/s Girl Missing வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில், ஈரோடு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், CWC அவர்கள் தலைமையில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்புக் கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டும், அண்டை மாவட்டங்களுக்கும் சோதனைச் சாவடிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், பேருந்தில் மைசூரு செல்ல இருந்த காணாமல்போன சிறுமியை, சத்தியமங்கலம் நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவினர், சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் கண்டுபிடித்தனர். மேற்படி சிறுமியை காணாமல்போன மூன்றே மணி நேரத்திற்குள், துரிதமாக செயல்பட்டு, கண்டுபிடித்த காவல்துறையினருக்கு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு தெரிவித்தார் என்பதை ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்