மத வழிபாட்டுக் கூட்டத்தில் ஏற்பட்ட உயிர் பலி - சீமான் வேதனை
உ.பி.யில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 100ற்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்திற்கு சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சமூகவலைத்தள பக்கத்தில், உத்திரபிரதேச மாநிலம் ஹதராஸ் பகுதியில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற மத வழிபாட்டு நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயமடைந்துள்ள துயரச்செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
இறந்த உடல்களைச் சுமந்தபடி, கண்ணீர் பெருகும் விழிகளோடு கதறி துடிக்கும் குடும்ப உறவுகளின் துயரம் இதயத்தைக் கனக்கச்செய்கிறது.
ஒவ்வொருமுறையும் விபத்து நிகழ்ந்த பிறகு வேகவேகமாக செயல்படுவதை விட, விபத்து நிகழ சாத்தியமுள்ள அனைத்து இடங்களிலும் முன்கூட்டியே திட்டமிட்டு மக்களைக் காப்பதில் நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் மிகுந்த அக்கறையுடன் செயல்பட வேண்டும். மக்கள் பெருமளவு கூடும் இடங்களில் முன்னெச்சரிக்கையுடன் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதுடன், விழிப்புணர்வுடன் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதும் மாநில அரசுகளின் தலையாயக் கடமையாகும்.