சென்னை விமான நிலையத்தில் கைவரிசை : சுங்கத்துறை அதிகாரி போல் நடித்து 12 சவரன் தங்க நெக்லஸ் பறிப்பு..!
சென்னை அண்ணா நகரை சேர்ந்த நந்தகோபால் (வயது 23) என்பவர் விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு கோவை விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் பயணிக்கும் பெண் ஒருவரிடமிருந்து ஒரு கவரை வாங்கிக்கொண்டு விருகம்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு செல்வதற்காக சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்திறங்கிய அந்த பெண்ணை சந்தித்த நந்தகோபால், அவரிடமிருந்து கவரை பெற்றுக்கொண்டதாக தெரிகிறது. பின்னர் இருவரும் சென்னை விமான நிலைய டெர்மினல் ஒன்று பகுதியில் நடந்து சென்றுள்ளனர். அப்போது அந்தப் பகுதிக்கு டிப்டாப் உடையில் வந்த மர்ம நபர் ஒருவர் நந்தகோபாலை வழி மறைத்து, தான் சுங்கத்துறை அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் நந்தகோபால் வைத்திருந்த கவரில் கடத்தல் தங்க நகை இருப்பதாகவும், அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, நந்தகோபால் கையில் வைத்திருந்த கவரை அந்த நபர் வலுகட்டாயமாக வாங்கிக்கொண்டு தன்னை பின்தொடர்ந்து வருமாறு கூறியுள்ளார். சர்வதேச விமான முனையம் நோக்கி வேகமாகச் சென்ற அந்த நபர், சிறிது நேரத்தில் நந்தகோபாலின் கண்ணில் இருந்து மறைந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் சந்தேகமடைந்த நந்தகோபால், சென்னை சர்வதேச முனையத்திற்கு சென்று மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். மேலும் அந்தக் கவரில் 12 லட்சம் மதிப்பிலான 12 சவரன் தங்க நெக்லஸ் இருந்ததையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுங்கத்துறை அலுவலகத்தில் விசாரித்தபோது, நந்தகோபாலிடமிருந்து கவரை வாங்கிச் சென்றது சுங்கத்துறையைச் சேர்ந்த அதிகாரி அல்ல என்பது தெரியவந்துள்ளது.
சுங்கத்துறை அதிகாரி என்று கூறிய நபரால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நந்தகோபால், இச்சம்பவம் குறித்து, சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்ற போலீசார், தங்க நெக்லஸுக்கான உரிய ஆவணங்களுடன் காவல் நிலையத்துக்கு வருமாறு அவரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும், விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சுங்கத்துறை அதிகாரி போல் நடித்து நந்தகோபாலிடம் இருந்து ஆள்மாறாட்டம் செய்து தங்க நெக்லஸை பறித்துச் சென்றநபர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.