கோவையில் அதிர்ச்சி சம்பவம் - 10 வயது சிறுமி சடலமாக மீட்பு..!
கோவை சூலூர் பகுதியில் வசி்க்கும் தம்பதிக்கு, 10 வயதில் மகள் இருந்தார். 4 ஆம் வகுப்பு படிக்கும் இம்மாணவி நேற்று முன்தினம் (மே 21) மாலை சிறுமி வீட்டருகே உள்ள கடைக்குச் சென்றதாக தெரிகிறது. அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து சிறுமியின் பெற்றோர், மாயமான தங்களின் மகளை அக்கம்பக்கத்தில் தேடினர்.
சிறுமி சென்ற மளிகைக்கடைக்குச் சென்று விசாரி்த்தபோது, ஒரு இளைஞர் இருசக்கர வாகனத்தில் சிறுமியை அழைத்துச் சென்றது தெரிய வந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த உடனடியாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையி்ல், கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள குளக்கரையில் ஒரு சிறுமியின் சடலம் கிடப்பதாக நேற்று (மே 22) மாலை சூலூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று சடலத்தை மீட்டு விசாரித்தனர். அதில், கடத்தப்பட்டதாகத் தேடப்பட்டு வந்த சிறுமி, சடலமாகக் கிடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி சென்று விசாரணையை துரிதப்படுத்தினார்.
சிறுமியைக் கடத்திச் சென்ற நபர்கள் குறித்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், சந்தேகத்துக்குரிய நபர்களை பிடித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதற்கிடையே, இவ்வழக்கில் தொடர்புடைய ஒருவர் காவல்துறையினரிடம் சிக்கியதாகக் கூறப்படுகிறது. எனினும், இந்த தகவலை உறுதிப்படுத்த காவல்துறையினர் மறுத்துவிட்டனர். சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளையும் காவல்துறையினர் கைப்பற்றி ஆய்வுச் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.