தேர்வுக்கு படிக்கச் சொல்லி தந்தை கண்டித்ததால் 10ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
தேர்வுக்கு படிக்கச் சொல்லி தந்தை கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசித்து வரும் சிவநாதன் - மாரியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சிவநாதன் பெயிண்டிங் தொழில்செய்து வருகிறார். இவரது மகன் கிஷோர் (15). மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளி பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். சிவநாதன் அவரது மனைவி மாரியம்மாளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மாரியம்மாள் இராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு மகளுடன் சென்றுவிட்டார்.
கிஷோர் தந்தையுடன் இருந்து படித்து வந்த நிலையில், தற்போது பத்தாம் வகுப்புக்கு தேர்வு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தேர்வுக்கு இடையே விடுமுறை இருந்ததால் தனது தாய் மாரியம்மாளை பார்க்க கிஷோர் ஊருக்கு சென்று விட்டு, இன்று காலை வந்துள்ளார். காலை வீட்டிற்கு வந்த கிஷோரை தந்தை சிவநாதன் தேர்வுக்கு படிக்காமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறாயே என சத்தம் போட்டதுடன், படிக்குமாறு சொல்லிவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் மாலை வீட்டிலிருந்த நிலையில் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு கிடந்ததால், அக்கம் பக்கத்தினர் கதவை தட்டி உள்ளனர். வெகு நேரமாகியும் கதவை திறக்காததால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, கிஷோர் தூக்கிட்ட நிலையில் கிடந்ததால், உடனடியாக அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு கிஷோரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் கிஷோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.