×

10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு... 

 

மாநில பாடத்திட்டத்தில் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடவுள்ளது.

கடந்த 2025-26ம் கல்வியாண்டில் படித்த 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற்றது. கடந்தாண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 12,467 பள்ளிகளைச் சேர்ந்த  8,82,806 மாணவர்களும், 25,801 தனித்தேர்வர்களும், 395 சிறைவாசிகளும் என மொத்தம் 9,09,002 பேர் தேர்வெழுதினர். இவர்களுக்காக மாநிலம் முழுவதும் 4,219 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த தேர்வு பணிகளில் ஒவ்வொரு நாளும் சுமார் 47,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 4,950-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். பள்ளிகளில் படித்த 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 மாணவர்களில்  தமிழ் பொதுத்தேர்வை 10,877 மாணவர்கள் மற்றும் 1,021 தனித்தேர்வர்கள் எழுதவில்லை. ஆங்கிலம் பொதுத் தேர்வை 10,369 மாணவர்களும், 1,042 தனித்தேர்வர்களும் எழுதவில்லை. கணிதப்பாட பொதுத் தேர்வை 11,284 மாணவர்களும் 1,524 தனித்தேர்வர்களும் எழுதவில்லை. அறிவியல் தேர்வு எழுத 11,341 மாணவர்களும் 1,240 தனித்தேர்வர்களும் வரவில்லை. சமூக அறிவியல் தேர்வை 11,228 மாணவர்களும் 1,231 தனித்தேர்வர்களும் எழுதவில்லை. ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற விருப்பமாெழி பாடத்தேர்வை எழுத 118 பேர் வரவில்லை என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 13ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது. அதன்படி விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுமையாக முடிவுற்று, மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்ற பணிகளும் தற்போது முடிவடைந்துள்ளது. இதைதொடர்ந்து, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை மே மாதம் 20ம் தேதி(நாளை) வெளியிடப்படும் என தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்திருந்தார். அதன்படி, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிடப்பட உள்ளது. இதனை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட உள்ளார். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in,  results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் பதிவெண், பிறந்தத்தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் தேர்வு எழுதுவதற்கு அளிக்கப்பட்ட செல்போன்  எண்ணிற்கும். தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும்   SMS  வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். Whatsapp செயலி வழியாகவும் தேர்வர்கள் பின்வரும் வழிமுறையை பின்பற்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
வாட்ஸ்அப் செயலியில் 7845252525 என்ற எண்ணை உங்கள் தொலைபேசி எண் தொடர்புகளில் சேமித்து வைத்து, அந்த எண்ணில் Hi  எனப் பதிவிட்டு பின்னர் வரும் செய்தியில் துறையின் பெயர் (Directorate of Government Examinations) மற்றும் தேர்வர்களின் வகுப்பினை தேர்வு செய்தால் தொடர்வரும் பதில் செய்தியில் தேர்வெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து அனுப்பினால், தேர்வர்களின் தேர்வு முடிவுகள் அதே Whatsapp செயலி உரையாடல் மூலம் கண்டறியலாம். தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் Whatsapp செயலியில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு முடிவுகள் குறித்த ஐயங்கள் ஏதேனும் இருப்பின் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம என அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.