×

கோவையில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் 

 

கோவை குனியமுத்தூர் அருகே கார் உதிரிபாகக் குடோனில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.

கோவை குனியமுத்தூர் - இடையர்பாளையம் சாலையில் உள்ள கருவேப்பிலை தோட்டம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பழைய கார் உதிரிபாகங்கள் சேமித்து வைக்கும் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் சட்டவிரோதப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், காலை சம்பவ இடத்திற்குச் சென்ற தனிப்படை போலீசார் அந்த குடோனில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக நடைபெற்ற இந்தச் சோதனையில், குடோனின் ஒரு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூட்டை மூட்டையாக சுமார் 100 கிலோ கஞ்சா இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இந்த கஞ்சாவின் சந்தை மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் எனத் தெரிகிறது. 

இந்தச் சம்பவம் தொடர்பாக, கோவையைச் சேர்ந்த அப்பாஸ், ஜென்னி ஜேக்கப், ரூபன் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நவ்பில் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். நான்கு பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இவ்வளவு பெரிய அளவில் கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டதா? அல்லது இதன் பின்னணியில் ஏதேனும் பெரிய கடத்தல் கும்பல்  செயல்படுகிறதா? என்பது குறித்து குனியமுத்தூர் போலிசார் விசாரித்து வருகின்றனர்.