×

போகி பண்டிகை - 100 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் பெறப்பட்டன

 

போகிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களிடமிருந்து சுமார் 100 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களால் பெறப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி  தெரிவித்துள்ளது. 

போகிப் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர் (Tyre), ரப்பர் ட்யூப் (Rubber Tube) மற்றும் நெகிழி (Plastic) ஆகியவற்றை எரிப்பதைத் தவிர்த்திட வேண்டும் எனவும், அதனை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கிடவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், இதுகுறித்து பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களில் உள்ள ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தும், சமூகவலைத் தளங்களில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதனைத் தொடர்ந்து, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 08.01.2023 முதல் 12.01.2023 வரை சுமார் 100 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் பெறப்பட்டுள்ளது.இவ்வாறு பெறப்பட்ட பொருட்கள் மாநகராட்சியின் வள மீட்பு மையங்களில் (RRC) பிரித்தெடுக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. 

மேலும், பயன்படுத்த இயலாத பொருட்கள் எரியூட்டி சாம்பலாக்கும் எரியூட்டும் ஆலைக்கு (Incinerator Plant) அனுப்பப்பட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரியூட்டப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.  எனவே, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பயன்பாட்டில் இல்லாதப் பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து, தங்கள் இல்லங்களில் திடக்கழிவுகள் சேகரிக்க வரும் மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.