×

வியட்நாம் படகு விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 10 தமிழர்கள் பலி; பெயர்கள் வெளியீடு..!

 

வியட்நாமின் பூ குவோக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற அதிவேகப் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 15 பேர் உயிரிழந்ததாக வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்துக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் பலியாகி இருப்பதாகவும், கேரளாவைச் சேர்ந்த 2 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர் என 15 பேர் உயிரிழந்தனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழர்கள் 17 பேர் உள்பட மொத்தம் 32 சுற்றுலா பயணிகள் அந்த படகில் பயணித்துள்ளனர். கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அந்த படகில் பயணித்துள்ளனர். சுற்றுலா பயணிகள் தவிர்த்து படகின் 4 பணியாளர்களும் பயணித்துள்ளனர். உயிரிழந்த 15 பேரும் சுற்றுலா பயணிகள் ஆவர்.

முருக பிரபு, செந்தில் குமார், ஸ்ரீதர், ஷேக் அப்துல்லா, பாலாஜி, வினய குமார், ரவி சங்கர், சந்தோஷ் குமார், பாபு, அழகுராஜன் ஆகிய 10 தமிழர்கள் வியட்நாம் சுற்றுலா படகு விபத்தில் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வியட்நாம் படகு விபத்தில் பழனியைச் சேர்ந்த முருகபிரபு என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகபிரபு (44) மற்றும் நிர்மல்குமார். இருவரும் பழனியில் உள்ள ஒரு செல்போன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர்களாக பணியாற்றி வந்தனர். சிறப்பான வணிகச் செயல்பாட்டிற்காக, சம்மந்தப்பட்ட செல்போன் நிறுவனம், இவர்களை வியட்நாம் நாட்டிற்கு சுற்றுலா அழைத்து சென்றுள்ளது.

படகு விபத்தில் தருமபுரியை சேர்ந்த செந்தில் குமார் (45) என்பவர் உயிரிழந்துள்ளார். தருமபுரி மாவட்டம், கடத்தூரைச் சேர்ந்த ஜெயவேல் என்பவரது மகன் செந்தில்குமார். தொழிலதிபரான இவர் தருமபுரியில் மாவட்ட அளவில் லாவா மொபைல் ஏஜென்சி, ஆர்.ஓ சிஸ்டம் ஏஜென்சி, கடத்தூரில் அலுமினிய பாத்திரங்கள் செய்யும் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வந்துள்ளார். இவருக்கு, பூவிழி (40) என்ற மனைவியும், லோகஶ்ரீ (7) என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

சேலத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் உயிரிழப்பு. உயிரிழந்த ஸ்ரீதர் ஹை க்யூ என்டர்பிரைசஸ் (பி) லிட் உரிமையாளர். இவர் ஓப்போ , ஐ போன், லாவா உள்ளிட்ட செல்போன்களின் விநியோகஸ்தர் எனக் கூறப்படுகிறது. இவருக்கு கார்த்திக், ஹரிணி ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

திருச்சி, எடமலைப்பட்டி புதூர், அன்பு நகரைச் சேர்ந்த அழகுராஜன், திருவானைக்காவல் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி, பீமநகர் பகுதியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா ஆகியோர் இந்த படகு விபத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்த இவர்கள் மூவரும் லாவா நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்கள் என தெரிகிறது. அந்நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இன்பச் சுற்றுலாவுக்காக அவர்கள் வியட்நாம் சென்றிருந்தனர் என்பது தெரியவந்துள்ளது.

வியட்நாமில் படகு விபத்தில் வேலூர் சைதாப்பேட்டை கன்னிகாபரமேஸ்வரி தெருவைச் சேர்ந்த வினய்குமார் (48) என்பவரும் உயிரிழந்துள்ளார். இவர் வேலூர் மெயின் பஜாரில் நகைக்கடை நடத்தி வந்ததுடன், பிரபல செல்போன் நிறுவனத்தின் வேலூர் மாவட்ட டிஸ்ட்ரிபியூட்டராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த சுற்றுலா படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்தும், விபத்தில் சிக்கியவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவரது X தளத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில், "வியட்நாம் நாட்டின் ஆன் தோய் கடல் பகுதியிலுள்ள ஹான் மே ருட் ங்வோய் (Hon May Rut Ngoai) தீவிற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு இன்று காலை விபத்தில் சிக்கியதில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்தேன்" என தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்

பிரதமர் நரேந்திர மோடி அவரது எக்ஸ் பக்கத்தில், “வியட்நாம் விபத்தில் இந்தியர்கள் 15 பேர் உயிரிழந்த தகவலறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையக் கடவுளை பிரார்த்திக்கிறேன். இந்திய தூதரகம், துணை தூதரகம் சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது. நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” என பதிவிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல்

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.