×

ஜோலார்பேட்டை அருகே ரயிலில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்

 

ஜோலார்பேட்டையில்  ரயிலில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை ரயில்வே  சிறப்பு தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர்.  

ரயில்கள் மூலம் கஞ்சா  கடத்தப்படுவதை தடுக்க, ரயில்வே சிறப்பு தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறனர். அந்தவகையில்,  நேற்றிரவு  ஜோலார்பேட்டை ரயில்வே சப்- இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையிலான ரயில்வே  சிறப்பு தனிப்படை போலீஸார்  ஆபரேஷன் கஞ்சா 2.0 வேட்டையில் இறங்கினர்.  விடிய விடிய ரயில்களில் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.  

அப்போது  அதிகாலை 3.30 மணியளவில் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து கேரள மாநிலம் கொச்சி வரை செல்லும் அகல்யாநகரி எக்ஸ்பிரஸ் ரயிலிலும் அவர்கள்  சோதனை செய்தனர்.   அந்த ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் உள்ள கழிப்பறை அருகே கேட்பாரற்ற நிலையில்  பை ஒன்று கிடந்துள்ளது.  சந்தேகத்தின்பேரில் ரயில்வே போலீஸார் அதனை எடுத்து சோதனை செய்து பார்த்தபோது,  10 பண்டல்களில், சுமார் 10 கிலோ கஞ்சா  இருந்தது தெரியவந்தது. பின்னர்  அவற்றை பறிமுதல் செய்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசில் ஒப்படைத்த அவர்கள்,  இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து  கஞ்சா கடத்திய நபர்களை தேடிவருகின்றனர்.