×

"நாங்க மட்டும் சும்மவா" - வோடஃபோனும் அதிரடியாக கட்டணத்தை உயர்த்தியது!

 

சமீப நாட்களாக தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடஃபோன் ஆகியவை ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தப் போவதாக செய்திகள் வட்டமடித்தன. நேற்று அது நிரூபணமானது. சொல்லிவைத்தாற் போல ஏர்டெல் ப்ரீபெய்டு கட்டணங்களை நேற்று உயர்த்தியது. ஏர்டெல்லை தொடர்ந்து தற்போது வோடஃபோனும் ப்ரீபெய்டு கட்டணத்தை அதிகரித்துள்ளது. ஏர்டெல்லை போலவே 25 சதவீதம் உயர்த்தியிருக்கிறது. இன்னொரு போட்டியாளரான ஜியோ நிறுவனம் மட்டுமே கட்டணத்தை உயர்த்தாமல் அப்படியே தொடர்கிறது.

இரு நிறுவனங்களும் நிதிச்சுமையைக் கருத்தில்கொண்டே கட்டணத்தை அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ப சிறப்பான சேவை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளன. ஆனால் சிக்னல் கிடைக்காமல் ஒவ்வொருவரும் படாத பாடுபடுவது நிறுவனங்களுக்கு தெரியவில்லை போலும். 4ஜி சிம்பிளில் 3ஜி வேகம் கூட கிடைப்பதில்லை என்பதே இன்றைய நிதர்சனம். ஆனால் கட்டண ஏற்றத்திற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை வாடிக்கையாளர்கள் திட்டி தீர்க்கின்றனர். ஏர்டெல்லை போலவே வோடஃபோன் ப்ரீபெய்டு கட்டணங்கள் ஆரம்பிப்பதே 99 ரூபாயில் தான். 

இது முன்பு 79 ரூபாயாக இருந்தது. இந்த பிளானில் உங்களால் யாருக்கும் மெசெஜ் அனுப்ப முடியாது. யாராவது அனுப்பினால் வரும். இதை விட்டால் 300 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி கொண்ட பிளான் 149 ரூபாயாக இருந்தது. அது தற்போது 179 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல 219 ரூபாய் பிளான் 269 ரூபாயகவும்,  2,49 ரூபாய் பிளான் 299 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. டேட்டா டாப்-அப்களுக்கு இப்போது முறையே ரூ.58 (ரூ. 48), ரூ.118 (ரூ. 98) மற்றும் ரூ.298 (ரூ. 251) உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல மற்ற கட்டணங்களும் 25% உயர்ந்திருக்கிறது. இந்த கட்டண உயர்வு நவம்பர் 25ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.