×

“புதிய சட்டம் வருகிறது; இந்தியாவுல வாட்ஸ்அப்பே இல்லாம ஆக்கிருவோம்” – எச்சரித்த மத்திய அரசு!

மக்களின் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்கும் மசோதா (Personal Data Protection bill) இந்தியாவில் அமலானால் வாட்ஸ்அப்பின் புதிய பிரைவசி கொள்கைகள் சட்டவிரோதமாகும் என்பதால், அவற்றைத் திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு மத்திய மின்னணு மற்றும் ஐடி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. டிஜிட்டல் உலகில் மீண்டும் பிரைவசி குறித்த பேச்சு எழுந்துள்ளது. வாட்ஸ்அப் வெளியிட்ட புதிய தனியுரிமைக் கொள்கைகள் தான் அதற்கு காரணம். அதன் கொள்கைகளை ஏற்காவிட்டால் சேவையை வழங்க மாட்டோம் என்று அகங்காரமாக வாட்ஸ்அப் கூறியிருந்தது.
 

மக்களின் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்கும் மசோதா (Personal Data Protection bill) இந்தியாவில் அமலானால் வாட்ஸ்அப்பின் புதிய பிரைவசி கொள்கைகள் சட்டவிரோதமாகும் என்பதால், அவற்றைத் திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு மத்திய மின்னணு மற்றும் ஐடி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

டிஜிட்டல் உலகில் மீண்டும் பிரைவசி குறித்த பேச்சு எழுந்துள்ளது. வாட்ஸ்அப் வெளியிட்ட புதிய தனியுரிமைக் கொள்கைகள் தான் அதற்கு காரணம். அதன் கொள்கைகளை ஏற்காவிட்டால் சேவையை வழங்க மாட்டோம் என்று அகங்காரமாக வாட்ஸ்அப் கூறியிருந்தது. மாற்று செயலிகளைத் தேடியதன் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப்பை தட்டி உட்கார வைத்துவிட்டனர். வாட்ஸ்அப் இப்போது கெஞ்சி கொண்டிருப்பது வேறு கதை.

இந்திய மக்களுக்கு எதைப் பயன்படுத்த வேண்டும் என தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கிறது. பேஸ்புக்கோ, வாட்ஸ்அப்போ இந்தியாவின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே நீங்கள் செயல்பட வேண்டும் என மின்னணு மற்றும் ஐடி அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கறாராகக் கூறியுள்ளார். பிரைவசி என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் அடிப்படை உரிமை; அதைச் சிதைக்கும் வண்ணம் செயல்பட்டால் இந்தியாவில் சுதந்திரமாக வர்த்தகம் செய்ய முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.

ஏற்கனவே, போட்டி நிறுவனங்களை வளர விடாமல் சந்தையில் தான் மட்டுமே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக வாட்ஸ்அப்&பேஸ்புக் ஓனர் மார்க் சக்கர்பெர்க் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடர்பான வழக்குகள் அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகின்றன.

தற்போது சந்தையில் நிறுவனங்களின் போட்டியை கண்காணிக்கும் ஆணையம் Competition Commission of India (CCI) வாட்ஸ்அப், பேஸ்புக்கின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனத்து வருகிறது.

இச்சூழலில் புதிய பிரைவசி கொள்கைகளை வாபஸ் வாங்குமாறு ஐடி அமைச்சகம் வாட்ஸ்அப் நிறுவனத்தின் அதிகாரி வில் கேத்கார்டுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் 14 கேள்விகளை எழுப்பி, அதற்கு 7 நாட்களில் பதிலளிக்குமாறு கூறியுள்ளது.

பயனர்களிடம் எந்த வகையான தரவுகள் பெறப்படுகின்றன, தரவுகளைப் பெறுவதற்கு என்னென்ன அனுமதிகள் கேட்கப்படுகின்றன, வணிகத்துக்காக பயனர்களின் தரவுகளை மற்றொரு நிறுவனத்தின் பகிர்கின்றீர்கள் என்றால் என்னென்ன தரவுகளைப் பகிர்கிறீர்கள், இந்திய பயனர்களின் தரவுகளை எந்த சர்வரில் சேமிக்கின்றீர்கள், பயனர்களின் பிரைவசி தரவுகளை யாரிடம் பகிர்கிறீர்கள் என 14 கேள்விகள் அக்கடிதத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

மிக முக்கியமாக ஐரோப்பிய பயனர்களுக்கு வேறு மாதிரியான பயன்பாட்டையும், இந்தியர்களுக்கு குறைந்தளவு பயன்பாட்டையும் கொடுத்திருப்பது ஏன் என்ற கேள்வியைக் கேட்டுள்ளது. தேர்ந்தெடுக்கும் உரிமையை இந்திய பயனர்களுக்கு வழங்காமல் இருப்பது ஏன் என்பதையும் வினவியுள்ளது.

மக்களின் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்கும் மசோதா (Personal Data Protection bill) இந்தியாவில் அமலானால் வாட்ஸ்அப்பின் புதிய பிரைவசி கொள்கைகள் சட்டவிரோதமாகும்; ஆதலால் திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மசோதாவானது 2019ஆம் ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் 20 உறுப்பினர்களைக் கொண்ட நிலைக் குழு ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. நிலைக் குழு குளிர்கால கூட்டத்தொடரில் ஆய்வு முடிவை சமர்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

தற்போது மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், பிப்ரவரி வரை சாத்தியமில்லை. ஏனெனில், பிப்ரவரியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

சமீபத்தில், வாட்ஸ்அப் கொள்கைகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், “வாட்ஸ்அப் ஒரு தனியார் நிறுவனம். அதன் விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டால் மட்டும் பயன்படுத்துங்கள். அனைத்து செயலிகளும் பயனர்களின் தரவுகளை சேமிக்கும் என்பதால், விதிகளைப் படித்து செயலிகளைப் பயன்படுத்துங்கள்” என கருத்து தெரிவித்தது.