×

”இன்டர்நெட் ஸ்பீடு – இந்தியாவில் படு மோசம்” ”உலகளவில் 131வது இடத்தில் இந்தியா”

செல்போன் இணையதள வேகத்தில் 138 நாடுகளில் இந்தியா 131ஆவது இடத்தில் இருப்பது ஊக்லா நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இணையத்தில் கிடைக்கும் வேகத்தை அளவிடும் தளங்கள் மற்றும் செயலிகளின் உதவியை கொண்டு, இணைய வேகத்தை அறிய உலகம் முழுவதும் பலர் அறிந்துகொள்கின்றனர். இவ்வாறு இணைய வேகத்தை அளவிடும் முன்னணி தளமாக விளங்கும், ஊக்லா நிறுவனம், தனது தளம் அல்லது செயலியை பயன்படுத்தி, அறியப்படும் இணைய வேகம் குறித்த தகவல்களை நாடுகள் மற்றும் மாதாந்திர அடிப்படையில் திரட்டி, சர்வதேச அளவில்
 

செல்போன் இணையதள வேகத்தில் 138 நாடுகளில் இந்தியா 131ஆவது இடத்தில் இருப்பது ஊக்லா நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இணையத்தில் கிடைக்கும் வேகத்தை அளவிடும் தளங்கள் மற்றும் செயலிகளின் உதவியை கொண்டு, இணைய வேகத்தை அறிய உலகம் முழுவதும் பலர் அறிந்துகொள்கின்றனர். இவ்வாறு இணைய வேகத்தை அளவிடும் முன்னணி தளமாக விளங்கும், ஊக்லா நிறுவனம், தனது தளம் அல்லது செயலியை பயன்படுத்தி, அறியப்படும் இணைய வேகம் குறித்த தகவல்களை நாடுகள் மற்றும் மாதாந்திர அடிப்படையில் திரட்டி, சர்வதேச அளவில் உலக நாடுகளின் இணைய வேகம் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், செப்டம்பர் மாத நிலவரத்தை அடிப்படையாக கொண்டு, இது தொடர்பாக ஊக்லா நிறுவனம், ”ஸ்பீட்டெஸ்ட் குளோபல் இன்டெக்ஸ் ஃபார் மொபைல்” என்ற ஆய்வை மேற்கொண்டது. மொத்தம் 138 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தென்கொரியா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், ஐக்கிய அரபு அமீரகம் 3வது இடத்திலும் கத்தார் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் 4 மற்றும் 5வது இடங்களிலும் உள்ளது தெரியவந்துள்ளது.

மொபைல் இணையதள வேகத்தை பொறுத்தவரை, 121எம்பிபிஎஸ் வேகத்துடன் தென்கொரியா முதலிடத்தில் உள்ளது. அதே சமயம், பிக்சட் லைன் பிராட்பேண்ட் பிரிவில் 226.60 எம்பிபிஎஸ் வேகத்துடன் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை, உலகிலேயே குறைந்த விலைக்கு அதிக டேட்டா கிடைக்கும் சந்தைகளில் ஒன்றாக திகழ்ந்தாலும் இணைய வேகம் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை என்றே இந்த ஆய்வு கூறுகிறது. மொத்தம் 138 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் இதில் 131வது இடத்தில் இந்தியா உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. சராசரியாக இந்தியாவில் மொபைல் இணையதள வேகமானது 12.07 எம்பிபிஎஸ் அளவில் தான் உள்ளது என ஊக்லாவின் அந்த அறிக்கை கூறுகிறது.

நாமெல்லாம் டிஜிட்டல் புரட்சி என்ற போர்வையில், எப்போதும் வாட்ஸ் அப்பும் கையுமாக யுடியூப்பும் கைபேசியுமாக இருந்துவருகிறோம். ஆனால் மொபைல் இணையதள வேகத்தில், அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை காட்டிலும் பின்தங்கி இருக்கிறோம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்