×

பணம் எடுக்க ஏடிஎம் கார்டே வேண்டாம்... இதை செய்யுங்க போதும்!

 

வங்கியில் பணம் எடுக்கும் நடைமுறையே நீண்ட காலமாக இருந்து வந்தது. இதன் காரணமாக வங்கிகளில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது என்பதால், ஏடிஎம் மையங்கள் உருவாக்கப்பட்டன. சிறிய அளவிலான தொகைகளை ஏடிஎம் கார்டு வைத்திருந்தால் எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் ஒருவேளை ஏடிஎம் கார்டை நீங்கள் மறந்து வீட்டில் வைத்துவிட்டால்? அதற்கும் தற்போது புதிய சேவையை வங்கிகள் வழங்குகின்றன. Cardless Transaction என்ற பெயரில் ஏடிஎம் கார்டு இல்லாமலேயே ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியும்.

அதற்கு ஒரு ஸ்மார்ட்போனும், உங்கள் வங்கி சார்ந்த செயலியும் இருந்தால் போதும். நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் என்றால் SBI  YONO செயலி வைத்திருக்க வேண்டும். மற்ற வங்கிகளுக்கு தனித்தனி செயலிகள் உள்ளன. வாடிக்கையாளர்கள் இந்த மொபைல் ஆப்பை பயன்படுத்தி குறைந்தபட்சம் 500 ரூபாயும், அதிகபட்சம் 20,000 ரூபாயும் எடுத்துக்கொள்ளலாம் என எஸ்பிஐ கூறியுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ ஏடிஎம்மில் தான் கார்டு இல்லாமல் பணம் எடுக்க முடியும். இதே நடைமுறை தான் மற்ற வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். யோனோவில் எப்படி பணம் எடுப்பது என்பதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்...

வழிமுறைகள் பின்வருமாறு:

முதலில் யோனோ ஆப்பில் உங்கள் பாஸ்வேர்டு, யூசர் ஐடி கொடுத்து லாக்-இன் செய்ய வேண்டும்.

அதன்பின் YONO CASH என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். அதில் ATM என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்த பின் உங்களுக்கு வேண்டிய தொகையைப் பதிவிட வேண்டும்.

Create Pin என்ற ஆப்சனை பயன்படுத்தி, நீங்களே ஆறு இலக்க பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும். அதற்குப் பின் வங்கியிலிருந்து உங்களுக்கு Transaction Number அனுப்பப்படும். இதோடு ஆப்பில் வேலை முடிந்தது. இது 4 மணி நேரம் மட்டுமே செல்லும்.

இந்த நம்பர் வந்த பிறகு அருகிலுள்ள எஸ்பிஐ ஏடிஎம் கிளைக்குச் சென்று, ஏடிஎம்மில் YONO CASH என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அதில் நீங்கள் உருவாக்கிய பாஸ்வேர்டு மற்றும் வங்கி அனுப்பிய  Transaction Number-யும் பதிவிடவும். அவ்வளவு தான் வேலை முடிந்தது. உங்களுக்கு தேவையான பணம் வந்துவிடும்.