×

ஃபிட்பிட் நிறுவனத்தைக் கைப்பற்றிய கூகுள்: பயனர்கள் பிரைவசி டேட்டாவின் நிலை என்ன?

நவீன உலகம் டிஜிட்டல் மயமாகிக் கிடக்கிறது என்று சொல்வதைக் காட்டிலும் கூகுள் மயமாகிக் கிடக்கிறது என சொல்வதே சரியாக இருக்கும். அந்தளவிற்கு டிஜிட்டல் உலகில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. எதையும் விட்டுவைக்காமல் அனைத்திலும் தன்னுடைய கால்தடத்தைப் பதிக்காமல் கூகுள் விட்டதில்லை. இதற்காக பல கேஸ்களை வாங்கியும் உள்ளது. போட்டி நிறுவனங்களை வளரவிடாமல், அவற்றை அபகரிக்கும் செயல்களை கூகுள், பேஸ்புக் போன்ற பெரு நிறுவனங்கள் மேற்கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரத்தின் அடிப்படையில் தான் அமெரிக்க காங்கிரஸ் கமிட்டி நடத்திய
 

நவீன உலகம் டிஜிட்டல் மயமாகிக் கிடக்கிறது என்று சொல்வதைக் காட்டிலும் கூகுள் மயமாகிக் கிடக்கிறது என சொல்வதே சரியாக இருக்கும். அந்தளவிற்கு டிஜிட்டல் உலகில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. எதையும் விட்டுவைக்காமல் அனைத்திலும் தன்னுடைய கால்தடத்தைப் பதிக்காமல் கூகுள் விட்டதில்லை.

இதற்காக பல கேஸ்களை வாங்கியும் உள்ளது. போட்டி நிறுவனங்களை வளரவிடாமல், அவற்றை அபகரிக்கும் செயல்களை கூகுள், பேஸ்புக் போன்ற பெரு நிறுவனங்கள் மேற்கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரத்தின் அடிப்படையில் தான் அமெரிக்க காங்கிரஸ் கமிட்டி நடத்திய விசாரணைக்கு கூகுள் நிறுவனம் சார்பாக சுந்தர் பிச்சை ஆஜராகினார்.

இதற்கு முன்னரே 2019 நவம்பரில் ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் கலக்கிவந்த ஃபிட்பிட் நிறுவனத்துடன் கூகுள் டீல் பேசியது. அப்போதே 2.1 பில்லியன் டாலர் மதிப்பில், அதாவது கிட்டத்தட்ட 200 கோடி டாலருக்கு அந்நிறுவனத்தை கூகுள் வாங்கியது.

அமெரிக்க நீதிமன்றத்தில் போட்டி நிறுவனங்களை அபகரித்ததற்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்ததால், கோப்புகளைக் கைமாற்றுவது காலதாமதானது. நேற்று தான் முழுமை பெற்றது. இதனை கூகுள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஃபிட்பிட் நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச்சில் ஸ்லீப் டிராக்கிங், கலோரி, இதயத்துடிப்பு உள்ளிட்ட ஃபிட்னஸ் வசதிகளை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது. இதற்குப் பின் தான் பல்வேறு நிறுவனங்கள் ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தின.

உலகம் முழுவதும் 3 கோடி மக்கள் (Active users) ஃபிட்பிட் தயாரிப்புகளைத் தற்போது உபயோகித்துவருகின்றனர். இதுவரை 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 12 கோடி தயாரிப்புகளை விற்பனை செய்திருக்கிறது. தற்போது கூகுள் நிறுவனத்திற்குக் கைமாற்றப்பட்டிருப்பதால் பயனர்களின் தரவுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இப்போது வாட்ஸ்அப்பின் புதிய பிரைவசி கொள்கைகள் டிஜிட்டல் உலகில் பயனர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றன. அதனால் தன்னிச்சையாக பாதுகாப்பு குறித்த கேள்வி ஃபிட்பிட், கூகுள் நிறுவனங்களுக்கு முன் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள இரு நிறுவனங்களும், “பயனர்களின் தரவுகள் பத்திரமாகப் பாதுகாக்கப்படும். அதில் எந்தவித சமரசத்திற்கும் உட்பட மாட்டோம். அதேபோல, பயனர்களின் தரவுகளை எங்களின் விளம்பர நோக்கத்திற்காகப் பயன்படுத்த மாட்டோம். தரவுகளை யாரிடமும் பகிர மாட்டோம். இந்த முடிவில் உறுதியாக இருக்கிறோம்” என்றன.

இதுதொடர்பாகப் பேசியுள்ள கூகுள் அதிகாரி ரிக் ஓஸ்டர்லோ, “சாதனங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது; பயனர்களின் தரவுகளுக்கு அல்ல. இரு நிறுவனங்களும் இணைந்து புதிய சாதனங்களைத் தயாரித்து பயனர்களுக்கு நல்ல சேவையை வழங்குவோம்” என முன்மொழிந்தார். இதனை ஃபிட்பிட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஜேம்ஸ் பார்க்கும் வழிமொழிந்தார்.

“அதேபோல, ஃபிட்பிட் சாதனங்களை மூன்றாம் தர சேவைகளுடன், அதாவது வேறு ஹெல்த் செயலிகளுடன் ஃபிட்பிட் கணக்கை இணைக்கும் வசதி தொடரும். அது நிறுத்தப்படாது. மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்கிறோம். கூகுள் ஆட்ஸ் (Google Ads) சேவைக்காக ஃபிட்பிட் பயனர்களின் தரவுகள் பயன்படுத்தப்படாது” என பார்க் கூறினார்.

ஃபிட்னஸ் ஸ்மார்ட்வாட்ச்சை முதன்முதலில் அறிமுகப்படுத்தினாலும், சந்தையில் முதல் ஐந்து இடங்களைப் பிடிக்கவே ஃபிட்பிட் போராடிவந்தது. ஆப்பிள், ஜியோமி ஆகிய நிறுவனங்களின் ஆதிக்கத்தை மீறி சந்தையில் ஃபிட்பிட்டால் எதையும் பெரிதாகச் சாதிக்க முடியவில்லை.

அதேபோல கூகுள் நிறுவனமும் ஆப்பிளுக்கு இணையாகச் சந்தையில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அதனுடைய Android WearOS சாதனங்கள் சந்தையில் அவ்வளவாக கவனம் பெறவில்லை. இந்தச் சூழலில் தான் ஃபிட்பிட் நிறுவனத்துடன் டீல் பேசி ஃபிட்னஸ் ஸ்மார்ட்வாட்ச்சில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறது.