×

மே மாதத்தில் இந்தியாவில் 19 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகளுக்கு தடை

 

தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறியதாக கடந்த மே மாதத்தில் இந்தியாவில் 19 லட்சம் கணக்குகளை தடை செய்துள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப் செல்போனில் இயங்கும் ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும்.  2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகியோரால் வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது. இவர்கள் இருவரும் யாஹூ நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் ஆவர். இச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள உதவுகிறது. வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனத்தினர் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து கையகப்படுத்தினர். உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலியை 2 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.  பயனாளர்களை கவரும் நோக்கத்தில் வாட்ஸப் நிறுவனம் அவ்வபோது தனது பயனாளர்களுக்கு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதேபொல் இந்தியாவில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, விதிகளை மீறும் கணக்குகள் தொடர்பான புகார்கள் மீது வாட்ஸ் ஆப் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இந்நிலையில், கடந்த மே மாதத்தில் தடை செய்யப்பட்ட கணக்குகள் குறித்த அறிவிப்பை வாட்ஸ் ஆப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த மே மாதத்தில், 19 லட்சம் இந்திய கணக்குகளை தடை செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. பயனர்-பாதுகாப்பு அறிக்கையில் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் வாட்ஸ் அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வாட்ஸ் ஆப் எண்களின் முற்பகுதியில் இடம்பெறும் நாடுகளுக்கான குறியீடான +91 என்பதை வைத்து அவை இந்திய பயனர்களின் கணக்குகள் என அறியப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 16 லட்சம் இந்திய பயனர்களின் கணக்குகளையும், மார்ச் மாதத்தில் 18.05 லட்சம் கணக்குகளையும் வாட்ஸ் ஆப் நிறுவனம் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.