×

இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி; விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் ரோஹித் ஷர்மா

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது லக்னோ: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லக்னோவில் எகனா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு
 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது

லக்னோ: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது  20 ஓவர் கிரிக்கெட் போட்டி லக்னோவில் எகனா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.  இதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் ஷர்மாவும், ஷிகர் தவானும் களம் இறங்கினர்.

ஷிகர் தவான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறு முனையில் ரோஹித் ஷர்மா பந்துகளை பறக்கவிட்டார். அணியின் ஸ்கோர் 123-ஆக இருந்த போது, ஷிகர் தவான் 43 ரன்களில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய இளம் வீரர்  ரிஷாப் பண்ட் 5 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

அபாரமாக விளையாடிய ரோஹித் சர்மா, கடைசி ஓவரில் சதம் அடித்து அசத்தினார். சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ரோகித் ஷர்மா அடிக்கும் 4-வது சதம் இதுவாகும். இந்தப் போட்டியில், ரோஹித் ஷர்மா 17 ரன்களை எட்டிய போது, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற்றார். விராட் கோலி 62 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 2102 ரன்கள் எடுத்துள்ளார். ரோஹித் ஷர்மா தனது 86-வது போட்டியில், விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

இறுதியாக, நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 195 ரன்கள் சேர்த்தது. ரோஹித் ஷர்மா 61 பந்துகளில் 111 ரன்களுடம், லோகேஷ் ராகுல் 16 பந்துகளில் 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, தொடக்கம் முதலே இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தன. இறுதியாக, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இதன் மூலம், 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இரண்டாவது டி20 போட்டியிலும் வென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.