×

முதல் டி20- விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

 

டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். மேலும், வேகப்பந்து வீச்சாளர் அசோக் சர்மா இந்த போட்டியின் மூலம் இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார்.முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் தொடக்கம் முதலே கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் வெஸ்லி மாதேவேரே மற்றும் டடிவானாஷே மருமானி ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது.அந்த அணியில் வெஸ்லி மாதேவேரே அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். டடிவானாஷே மருமானி 27 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணியின் பந்துவீச்சில் பிரின்ஸ் யாதவ் மற்றும் மயங்க் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். குறிப்பாக பிரின்ஸ் யாதவ் 4 ஓவர்களில் வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டார்.126 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா ஏமாற்றம் அளித்தார். அவர் 8 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி, பவுண்டரிகளும் சிக்சர்களும் விளாசி ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்களை திணறடித்தார்.வெறும் 18 பந்துகளில் அரைசதத்தை எட்டிய அவர், 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் உதவியுடன் 19 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து இஷான் கிஷன் 35 ரன்கள் சேர்த்து அணிக்கு வலுசேர்த்தார்.

இறுதிக்கட்டத்தில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 28 ரன்களுடனும், திலக் வர்மா 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்திய அணி 13.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.