×

அமெரிக்காவில் முதல் உலகக்கோப்பை; 29 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் ஐசிசி சீரிஸ்!

 

சமீபத்தில் தான் ஐசிசி டி20 உலகக்கோப்பை நடந்துமுடிந்தது. அடுத்தாண்டு ஆஸ்திரேலியாவில் மற்றொரு டி20 உலகக்கோப்பை நடைபெறும். அதேபோல 2023ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை இந்தியா நடத்தவுள்ளது. தற்போது 2024ஆம் ஆண்டு முதல் 2031ஆம் ஆண்டு வரையில் நடைபெறவிருக்கும் கிரிக்கெட் தொடர்களையும், எந்த நாடு அதனை நடத்தப்போகிறது என்பதையும் ஐசிசி அட்டவணையாக வெளியிட்டுள்ளது. 

அந்த வகையில் 4 டி20 உலகக்கோப்பைகள், 2 50ஓவர் ஒருநாள் உலகக்கோப்பைகள் மற்றும் இரண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை நடைபெறவிருக்கின்றன. இதில் 2026 டி20 உலகக்கோப்பை, 2029 சாம்பியன்ஸ் டிராபி, 2031 உலகக்கோப்பையை இந்தியா நடத்துகிறது. இதில் 2026, 2031 உலகக்கோப்பை ஆகியவற்றை இந்தியாவுடன் இணைந்து இலங்கையும் வங்கதேசமும் நடத்துகின்றன. ஆனால் இது விஷயமல்ல. இதில் இரண்டு சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன.

ஆம் 2024 டி20 உலகக்கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்துகின்றன. கிரிக்கெட் வரலாற்றில் அமெரிக்கா முதன்முறையாக ஐசிசி தொடர் ஒன்றை நடத்துகிறது என்பதே முதல் சுவாரஸ்யம். இதன்மூலம் அமெரிக்காவில் கிரிக்கெட் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சுவாரஸ்யம் பாகிஸ்தான். 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துகிறது. கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி தொடரை பாகிஸ்தான் நடத்தவிருக்கிறது.

முழு அட்டவணை பின்வருமாறு:

2024 டி20 உலகக்கோப்பை - அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்

2025 சாம்பியன்ஸ் டிராபி - பாகிஸ்தான்

2026 டி20 உலகக்கோப்பை - இந்தியா, இலங்கை

2027 50 ஓவர் உலகக்கோப்பை - தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா

2028 டி20 உலகக்கோப்பை - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து

2029 சாம்பியன்ஸ் டிராபி - இந்தியா

2030 டி20 உலகக்கோப்பை - இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து

2031 50 ஓவர் உலகக்கோப்பை - இந்தியா, வங்கதேசம்