×

இனி "விவோ ஐபிஎல்" அல்ல... "டாடா ஐபிஎல்" தான் - புதிய ஸ்பான்ஸர்; 10 அணிகள் - களைகட்டும் "கிரிக்" திருவிழா! 

 

ஒவ்வொரு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறுவதற்கு முன்னரும் பிசிசிஐ அந்த சீசனுக்கான ஸ்பான்சரை எப்படியாவது தேடிப்பிடித்து டீல் பேசிவிடும். ஏலத்தின்போதே மார்க்கெட்டிங் வேலையில் இறங்கிவிடும் ஸ்பான்ஸர் நிறுவனங்கள். அந்த வகையில் 2018ஆம் ஆண்டு சீன நிறுவனமான விவோவுடன் ரூ.2,199 கோடிக்கு டீல் பேசி, 5 ஆண்டு ஸ்பான்ஸர்சிப் ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம் 2022ஆம் ஆண்டு முடிவடையும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்திய-சீன எல்லையில் பதற்றம் நிலவியதால், சீன நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் மேற்கொள்ளக் கூடாது என்ற அழுத்தம் உருவானது. 

ஆரம்பத்தில் பிசிசிஐ இதை மறுத்தாலும், விவோ தாமாகவே ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொண்டது. கடைசி நேரத்தில் ஸ்போர்ட்ஸ் பேன்டஸி நிறுவனமான ட்ரிம் 11-க்கு 222 கோடிக்கு அந்த ஒப்பந்தம் கைமாறியது. 2020 ஐபிஎல் சீசனுக்கு ட்ரிம் 11 தான் டைட்டில் ஸ்பான்ஸர். ஆனால், கடந்தாண்டு பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருந்த மினி ஏலத்திற்கான ஸ்பான்ஸர் யார் என்ற விவரம் சஸ்பென்ஸாகவே இருந்தது. வழக்கத்தை விட அதிக லாபத்தை பிசிசிஐ எதிர்பார்த்ததால் தான் இந்த இழுபறி என்று கூறப்பட்டது. 

விவோ மீண்டும் வந்தால் நாங்கள் முழு மனதுடன் வரவேற்கிறோம் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. பிசிசிஐ அழைத்தாலும் விவோ பின்வாங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் அனைவரின் கணிப்பையும் பொய்யாக்கி விவோ ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த சீசனும் முடிந்துவிட்டது. இந்தாண்டும் விவோவுடனான ஒப்பந்தம் தொடரும் என சொல்லப்பட்டது. ஆனால் விவோ விலகிக்கொண்டது. இச்சூழலில் 2022 சீசனுக்கான டைட்டில் ஸ்பான்ஸர் யாராக இருக்கும் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. தற்போது இதற்கான விடை கொடுத்துள்ளது. 

ஆம் இந்தியாவின் மிகப்பெரிய பிசினஸ் மேக்னட்டான டாடாவின் டாடா குழுமம் தான் ஸ்பான்ஸர் ஏலத்தில் வென்றுள்ளது. இதனை ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் உறுதிப்படுத்தியுள்ளார். 2022 சீசன் டைட்டில் ஸ்பான்ஸரை டாடா ஏலம் எடுத்தாகக் கூறினார். இதுதொடர்பாக டாடா குழும செய்தித்தொடர்பாளரிடம் கேட்டபோது, அவர்களும் ஆம் என்று கூறியுள்ளனர். ஆனால் எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுத்தார்கள் என்பது குறித்த தகவலை தெரிவிக்க மறுத்துவிட்டார்கள். 2023ஆம் ஆண்டு தொடங்கும் அடுத்த சீசனுக்கு புதிய டெண்டர்களை பிசிசிஐ கோரும் என்பதால், டாடா உடனான ஒப்பந்தம் இந்த ஆண்டுக்கு மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது.