×

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3வது பதக்கம்.. வெண்கலம் வென்று அசத்திய ஸ்வப்னில் குசேல்.. 

 


பாரிஸ் ஒலிம்பிக் 2024ல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு 3வது பதக்கம் கிடைத்துள்ளது. இந்தியாவின் ஸ்வப்னில் குசால், 50 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். 

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33-வது ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா இரண்டு பதக்கங்களை வென்றிருந்த நிலையில் தற்போது 3 வது பதக்கம் கிடைத்திருக்கிறது.  முன்னதாக  கடந்த ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் 22 வயதான மனு பாகர், வெண்கலம் வென்று அசத்தி இருந்தார்.  அதன் தொடர்ச்சியாக  அடுத்த 48 மணி நேரத்துக்குளாக இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தை வென்று கொடுத்தது மனுபாகர் -சரப்ஜோத் சிங் ஜோடி.  

இந்த ஜோடி கடந்த செவ்வாய் கிழமை( ஜூலை 30) நடைபெற்ற வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் கொரியாவின் ஓ யே ஜின், லீ வோன்ஹோ ஜோடியுடன் பலப்பரீட்சை மேற்கொண்டது. அதில்  16-10 என முன்னிலை பெற்று மனு பாகர் - சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றுள்ளது.  இது இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம் ஆகும்.

தற்போது இந்தியாவுக்கு 3வது பதக்கமும் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் கிடைத்துள்ளது. 50 மீ., ஏர் ரைபிள் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் ஸ்வப்னில் குசால், 451.4 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்று அசத்தியிருக்கிறார். இதன் மூலம் நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியா 3 பதக்கங்களை பெற்று, பதக்கப்பட்டியலில்  41வது இடத்தில் உள்ளது.