ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு முதல் பெண் கோச் - மாஸ் காட்டும் "மின்னல்” சாரா!
உலகம் பாலினம் கடந்து வேகமாக முன்னேறி வருவதற்கு தினமொரு உதாரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆண், பெண் பேதமில்லாமல் அனைவரும் சம உரிமையுடன் ஒன்றிணைந்து ஒரு செயலைச் செய்யலாம் என்ற மனப்பக்குவம் மிக வேகமாக வளர்ந்து வருவதே அதற்குக் காரணம். அந்த வகையில் ஆண்கள் கோலோச்சும் கிரிக்கெட்டில், பெண் ஒருவர் பயிற்சியாளராகியிருக்கிறார். இது மாபெரும் சாதனையின்றி வேறு இல்லை. அந்தளவிற்கு தன்னை உலகத்திற்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறார் அந்தப் பெண். யார் அவர்?
இங்கிலாந்தைச் சேர்ந்த ஜாம்பவான் வீராங்கனை சாரா டெய்லர் தான் அது. இவர் மின்னல் வேக கைகளுக்குச் சொந்தக்காரர் என்று சொன்னால் மிகையல்ல. ஆடவர் கிரிக்கெட்டையே பார்த்து பழகிய நம்மிடம் சிறந்த விக்கெட் கீப்பர் யாரென்று கேட்டால் கில்கிறிஸ்ட், தோனி, சங்ககரா என்போம். ஆனால் அந்த கில்கிறிஸ்ட்டே தன்னை விட சிறந்த விக்கெட் கீப்பர் என சாரா டெய்லரை பாராட்டியுள்ளார். இவர் தான் தற்போது அபுதாபி ஆண்கள் அணிக்கு துணை பயிற்சியாளராக (assistant coach) நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 32 மட்டுமே.
சாரா ஏற்கெனவே இங்கிலாந்து கவுண்டி கிளப்பான சசெக்ஸ் ஆண்கள் அணிக்கு விக்கெட் கீப்பருக்கான சிறப்பு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அரபு அமீரக டி-10 கிரிக்கெட் தொடரில் புதிதாக இணையும் அபுதாபி அணியின் துணை பயிற்சியாளராகிறார். தலைமை பயிற்சியாளர் பால் ஃபார்பிரேஸுடன் இணைந்து பணியாற்றுவார் என அணி நிர்வாகம் கூறியுள்ளது. 200க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடி 6,533 ரன்களைக் குவித்துள்ளார். விக்கெட் கீப்பராக 232 டிஸ்மிஸல்களை செய்து, மகளிர் கிரிக்கெட்டில் அதிக டிஸ்மிஸல் செய்தவர் என்ற சாதனை படைத்துள்ளார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார்.