×

"ஒரே போட்டி 3 ரெக்கார்ட்ஸ்" - மாஸ் காட்டிய "ஹிட்மேன்" ரோஹித் சர்மா!

 

ஹிட்மேன் என்ற பெயர் தனக்கு சும்மா ஒன்றும் வைக்கவில்லை என்பதை அவ்வப்போது நிரூபித்துக் காட்டிவிடுவார் ரோஹித் சர்மா. அவர் வெடிக்கும் வரை உள்ளே கொதிக்கும் எரிமலை; வெடித்துவிட்டால் தடுத்துநிறுத்த முடியாத காட்டாற்று வெள்ளம். சிக்ஸர்களை பறக்கவிட ஆரம்பித்துவிட்டால் உலகதர பந்துவீச்சாளர்கள் வந்தாலும் ஸ்டேடியத்துக்கு வெளியே தான் பந்து பறக்கும். தற்போது முழு நேர கேப்டனாகவும் பொறுப்பேற்றுவிட்டார்.

அடி ஒவ்வொன்றும் இடி மாறி இறங்கி கொண்டிருக்கிறது. அவர் கேப்டனாக இருந்த அனைத்துப் போட்டிகளிலுமே மிகச் சிறப்பாக விளையாண்டிருக்கிறார் என்பதைத் தான் புள்ளிவிவரங்களும் சொல்கின்றன. நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் காட்டடி அடித்து 36 பந்துகளில் 48 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்திலும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு அரைசதம் கடந்தார். 36 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்ஸர்களும் 1 பவுண்டரியும் அடக்கம்.

இந்த அரைசதத்தின் மூலம் மூன்று சாதனைகளைப் புரிந்திருக்கிறார். அதில் ஒரு சாதனையை கேஎல் ராகுலுடன் இணைந்து சமன் செய்திருக்கிறார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த வீரராக விராட் கோலி இருந்தார். நேற்று அரைசதம் அடித்ததன் மூலம் 29 அரைசதங்களைப் பூர்த்திசெய்த ரோஹித் சர்மா, கோலியுடன் அந்தச் சாதனையைப் பங்கிட்டுள்ளார். இதில் 4 அரைசதங்களை சதங்களாக மாற்றியுள்ளார் ஹிட்மேன். பாகிஸ்தானின் பாபர் அசாம்-ரிஸ்வான் தொடக்க ஜோடி டி20யில் 5 முறை 100 ரன்களைக் கடந்திருந்தார்கள். 

தற்போது கேஎல் ராகுல்-ரோஹித் சர்மா ஜோடி சமன் செய்திருக்கிறது. 5 முறை சதம் கண்டிருக்கிறது இந்த ஜோடி. அதேபோல ரோஹித் சர்மாவுடன் இணைந்த ஜோடி 13ஆவது முறை 100 ரன்களைக் கடந்துள்ளது. பாகிஸ்தானின் பாபர் ஆசம், நியூசிலாந்தின் மார்ட்டின் கப்டில் ஜோடி தலா 12 முறை 100 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஜோடி 11 முறை 100 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளது.