×

இதுவரை யாருக்குமே இவ்ளோ இல்லையாம்... டிராவிட்டுக்கு அள்ளிக்கொடுக்கும் பிசிசிஐ!

 

இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கும் கேப்டன் கோலிக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருந்தது. இந்த இருவர் கூட்டணி பெரிய ஐசிசி கோப்பைகளை வெல்லாவிட்டாலும், பல சீரிஸ்களில் பல சம்பவங்களைச் செய்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். தலைசிறந்த கேப்டன் தோனி அடித்தளம் அமைத்துக்கொடுக்க, இவர்கள் இருவருமே இணைந்து பலமான கோட்டையைக் கட்டியெழுப்பினர். அதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. இருப்பினும் 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா தோற்ற பின் ரவி சாஸ்திரியை பதவி விலகக்கோரி கலகக்குரல் எழுந்தது.

இச்சூழலில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ரவி சாஸ்திரி தான் தேவைக்கு மேலே சாதித்துவிட்டதாகவும் இதற்கு மேலும் இந்திய பயிற்சியாளராக நீடிக்க விருப்பமில்லை எனவும் நேரடியாகவே கூறிவிட்டார். அப்போதே அவர் விலகுவது உறுதியானது. 2017ஆம் ஆண்டு பயிற்சியாளராக ஆரம்பித்த அவரது பயணம் டி20 உலகக்கோப்பையோடு முடிவுக்கு வருகிறது. அந்தப் பொறுப்புக்கு முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் வரவிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வந்த வண்ணமே இருந்தன. நேற்று அது உறுதியாளியுள்ளது.

டி20உலகக் கோப்பை தொடர் முடிந்தபின், நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்படுகிறார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 2023ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் வரையிலும் டிராவிட் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருப்பார். சிறப்பாகச் செயல்பட்டால் அவருடைய பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம். அதேபோல ராகுல் டிராவிட்டுக்கு ஆண்டு ஊதியமாக இதுவரை எந்தப் பயிற்சியாளருக்கும் வழங்காத மிகப்பெரிய தொகையான 10 கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

கூல் கேப்டன் என தோனியை இன்றளவும் அழைத்துவருகிறோம். அதற்குக் காரணம் நிலை தவறாமை. எந்த நேரத்திலும் பிரஷ்ஷெராக (P) இருக்கமாட்டார். எதிரணிக்கே பிரஷ்ஷெர் அதிகமாக இருக்கும். இந்தச் செயலை தோனிக்கு முன்பே செய்துகாட்டியவர் ராகுல் டிராவிட் தான். இந்திய அணிக்கே எப்படி பிரஷ்ஷெரை கையாள வேண்டுமென பாடம் எடுத்தவர். இதனை பல்வேறு பேட்டிகளில் பிசிசிஐ தலைவர் கங்குலி சொல்லியிருக்கிறார். அப்படியொருவர் பயிற்சியாளராக வந்திருப்பது இந்திய அணியை உலக அரங்கில் உயர்த்திக் காட்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். 

குறிப்பாக உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களின் லீக் சுற்றுகளில் வெளுத்துவாங்கிவிட்டு, அரையிறுதி அல்ல இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் பிரஷ்ஷெரில் கோப்பையை நழுவவிடுவார்கள். அதை டிராவிட் சீர்செய்வார் என்று நம்பப்படுகிறது. தேசிய கிரிக்கெட் அகடாமியின் தலைமை பொறுப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ராகுல் டிராவிட் இருந்துவந்தார். இவர் தலைமையின் கீழ் தான் இன்று ஐபிஎல் போட்டிகளில் கோலோச்சும் இஷான் கிஷான், பிரித்வி ஷா, பண்ட் உள்ளிட்ட இளம் வீரர்கள் வளர்ந்து வந்தனர் என்பது கவனிக்கத்தக்கது. இந்தப் பொறுப்புக்கு மற்றொரு ஜாம்பவான் விவிஎஸ் லக்‌ஷ்மணன் வரலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.