×

ஜோகாவிச்சிடம் மீண்டும் வம்பிழுக்கும் ஆஸி. அரசு... புதிய காரணத்துடன் விசா ரத்து!

 

செர்பியா நாட்டைச் சேர்ந்த நோவாக் ஜோகோவிச், உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரராக திகழ்பவர். ஆனால் வேக்சின் மீது நம்பிக்கையற்றவர். தடுப்பூசி போடுவதும் போடாததும் தன்னுடைய தனிப்பட்ட விருப்பம். அதில் யாரும் தலையிட கூடாது. கருத்து கூறக் கூடாது எனவும் நீண்ட நாட்களாகவே கூறி வருகிறார். இதனிடையே டென்னிஸ் உலகில் ஆண்டின் முதல் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் ஜனவரி 17ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என போட்டி நிர்வாகமும் அந்நாட்டு அரசும் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஜோகோவிச் கலந்துகொள்வது கேள்விக்குறியானது. எனினும் ஜோகோவிச்சுக்கு ஸ்பெஷல் விலக்கு கொடுத்தது செர்பிய நாட்டு அரசு. தடுப்பூசி செலுத்தாததற்கான மருத்துவ விதிவிலக்கு சான்றிதழ்களை வழங்கியது. இதனை வாங்கி கொண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கடந்த ஜனவரி 5ஆம் தேதி மெல்போர்ன் நகருக்குச் சென்றார். அப்போது ஆஸ்திரேலிய விமான நிலைய அதிகாரிகள் அங்கேயே வழிமறித்து அவர் கொடுத்த மருத்துவ சான்றிதழை ஏற்க மறுத்தனர். அனுமதிக்க மறுத்து தடுப்புக் காவலில் வைத்தனர். 

விசாவையும் ரத்து செய்தனர். ஒரு கைதியைப் போல அவரை ஆஸ்திரேலிய அரசு ட்ரீட் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. டென்னிஸ் ரசிகர்கள் பலரும் அரசை கடுமையாக விமர்சித்தார்கள். இதையடுத்து ஆஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தில் ஜோகோவிச் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஜோகாவிச் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால், அடுத்த 6 மாதங்கள் தடுப்பூசி செலுத்த தேவையில்லை. ஆகவே தற்காலிக விலக்கு அவருக்கு அளிக்கப்பட்டது என அவரது தரப்பில் வாதாடப்பட்டது. வழக்கின் விசாரணை முடிந்து நீதிமன்றம் ஜன. 10ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. 

அப்போது ஆஸ்திரேலிய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், அவர் போட்டியில் கலந்துகொள்ள அனுமதியும் வழங்கியது. இது பெரும் வரவேற்பை பெற்றது. ஜோகோவிச் ரசிகர்கள் கொண்டாடினர். இச்சூழலில் மீண்டும் ஆஸ்திரேலிய அரசு ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்துள்ளது. இது அவரது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்முறை வேறு காரணத்தைக் கூறி ரத்து செய்துள்ளது. அதாவது, "ஜோக்கோவிச் தடுப்பூசிக்கு எதிரான கொள்கை கொண்டவர். அவர் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து தங்கியிருந்தால் தடுப்பூசிக்கு எதிரான சில மக்களின் மனநிலை வலுப்பெறும். இதனால் உள்நாட்டு அமைதிக்குக் குந்தகம் உண்டாகும் என்பதால் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது" என கூறியுள்ளது.