×

தமிழ்நாடு அணியிலிருந்து 'யார்க்கர்' நடராஜன் திடீர் நீக்கம் - காரணம் என்ன?

 

கடந்த ஐபிஎல் சீசன் மூலம் நடராஜன் மீது பிசிசிஐயின் கண்பட்டது. சிறப்பாகப் பந்துவீசி ஜாம்பாவான் வீரர்களை அவுட்டாக்கி யார்க்கர் கிங் என பெயர் பெற்றார். இதனால் அவர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் நெட் பவுலராகச் சென்றார். முதல் இரு ஒருநாள் தொடர்களில் இந்தியா தோற்ற பின், அடுத்த போட்டியில் நடராஜன் களமிறக்கப்பட்டார். அவரின் சிறப்பான பந்துவீச்சால் தொடரை இழந்தாலும், அப்போட்டியை வென்றது இந்தியா. இதனால் டி20 போட்டிகளில் விளையாட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 

கட்டுக்கோப்பான பந்துவீச்சின் காரணமாக டி20 தொடரை வெல்ல அவர் உறுதுணையாக இருந்தார். கேப்டன் கோலி அவரிடம் கோப்பையைக் கொடுத்து அழகு பார்த்தார். அதேபோல டெஸ்ட் போட்டிகளில் நெட் பவுலராக இணைந்தார். ஆனால் இந்த சுற்றுப்பயணத்திற்குப் பின் அவரை எந்தப் போட்டிக்கும் பிசிசிஐ தேர்ந்தெடுக்கவில்லை. காயத்தால் அவர் அவதிப்பட்டதே அதற்குக் காரணம் என சொல்லப்பட்டது. கொரோனா மற்றும் மீண்டும் காயம் காரணமாக அரபு அமீரகத்தில் நடந்த எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் அணியிலிருந்தும் விலகினார்.

இருப்பினும் சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் விளையாடி வந்தார். காயத்திற்குப் பிறகு அவரால் சரியாக பந்துவீச முடியவில்லை. இதனால் இறுதிப்போட்டியில் கூட அவரைச் சேர்க்கவில்லை. இச்சூழலில் மற்றொரு கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபிக்கான தமிழ்நாடு அணியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல காயத்தால் அவதிப்பட்டு வந்த வாசிங்டன் சுந்தர், தினேஷ் கார்த்திக் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். 

அணி விவரம்: 

விஜய் சங்கர் (கேப்டன்), ஜெகதீசன், தினேஷ் கார்த்திக், ஹரி நிசாந்த், ஷாருக் கான், ஷாய் கிஷோர், முருகன் அஸ்வின், சந்தீப் வாரியர், வாஷிங்டன் சுந்தர், எம் சித்தார்த், சாய் சுதர்ஸன், கங்கா ஸ்ரீதர் ராஜூ, எம். முகமதது, ஜே.கவுசிக், பி.சரவணகுமார், எல். சூர்யபிரகாஷ், பாபா இந்திரஜித், ஆர்.சஞ்சய் யாதவ், எம் கவுசிக் காந்தி, ஆர்.சிலம்பரசன்