×

ஐபிஎல் சீசனில் லக்னோ, அகமதாபாத் டீம்கள்... வாங்கியது யார்? - பிசிசிஐக்கு கொட்டிய வருமானம்!

 

ஐபிஎல் ரசிகர்களுக்கு நீண்ட நாட்களாக ஒரேயொரு குறை மட்டுமே இருந்தது. எட்டு அணிகள் மட்டுமே விளையாடுவது என்பது சீக்கிரமே தொடர் முடிவடைந்துவிடுவது போல இருப்பதாக ரசிகர்கள் கூறி வந்தனர். அதேபோல கொரோனா காரணமாக பிசிசிஐக்கும் கஜானா நிரம்பாமல் இருக்கிறது. இதனடிப்பையில் வரவிருக்கு 15ஆவது சீசனில் மேலும் இரண்டு புதிய அணிகளைக் கொண்டுவர திட்டமிட்டது. ஆகஸ்ட் மாதம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதன்மூலம் ரூ.5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் கோடி லாபம் ஈட்டலாம் என பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

புதிய அணிகளை வாங்குவதற்கான டெண்டரையும் வெளியிட்டிருந்தது பிசிசிஐ. இதற்காக ஏலம் எடுப்பவர்களுக்கான விதிமுறைகளையும் விதித்திருக்கிறது. அணியை ஏலம் எடுப்பவர்கள் சராசரியாக ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதிக்க வேண்டும் அல்லது நிகர சொத்து மதிப்பு ரூ.2 ஆயிரத்து 500 கோடியாக இருக்க வேண்டும். இவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க தகுதியானவர்கள். மிக முக்கியமாக உள்நாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமில்லாமல் இம்முறை வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் டெண்டரில் பங்கேற்க பிசிசிஐ அனுமதித்தது.

உள்நாட்டு நிறுவனங்களான அதானி குழுமம், டோரண்ட் பார்மா, அரபிந்தோ பார்மா, சஞ்சீவ் கோயங்கா குழு, ஜிண்டால் ஸ்டீல், சிவிசி கேபிடல் பார்ட்னர்ஸ்
உள்ளிட்டவை டெண்டருக்கு விருப்பம் தெரிவித்தனர். குறிப்பாக இங்கிலாந்தைச் சேர்ந்த மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பின் உரிமையாளரும், நடிகர்கள் ரன்வீர் சிங்-தீபிகா படுகோனே ஆகியோரும் டெண்டருக்கான விண்ணப்பத்தை வாங்கியிருந்தார்கள். மறைமுகமாக ஏலமாக இது நடைபெற்றது. அதாவது வாங்க விரும்பும் நிறுவனங்கள் தாங்கள் ஏலம் எடுக்கும் தொகையை பிசிசிஐயிடம் கொடுக்க வேண்டும். ஒரு நிறுவனம் கோரும் தொகை மற்ற நிறுவனங்களுக்கு தெரியாது.

அந்த வகையில் லக்னோவை (உத்தரப்பிரதேசம்) தலைமையிடமாகக் கொண்ட அணியை கோயங்காவின் ஆர்பிஎஸ்ஜி குழுமம் ரூ.7090 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்தக் குழுமம் ராஜஸ்தாஸ்,சிஎஸ்கே அணிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டபோது புனே சூப்பர்ஜெய்ண்ட்ஸ் அணியை ஏற்கெனவே வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல அகமதாபாத்தை (குஜராத்) தலைமையிடமாகக் கொண்ட அணியை சிவிசி கேபிடல் பார்ட்னர்ஸ் நிறுவனம் ரூ.5166 கோடிக்கு வாங்கியது. இரண்டும் சேர்த்து பிசிசிஐக்கு ரூ.13 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது. 8 ஆயிரம் கோடி வரை எதிர்பார்த்த பிசிசிஐக்கு இவ்வளவு வருமானம் கிடைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் வரவிருக்கும் சீசனில் 10 அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் ஹோம் கிரவுண்டில் 7 போட்டிகள், வேறு அணிகளுக்குச் சொந்தமான கிரவுண்டில் 7 போட்டிகளில் விளையாடவுள்ளன.

எப்படியாகினும் முன்பிருந்ததைப் போல ஒரு அணி 14 போட்டிகளில் மட்டுமே விளையாடும். மொத்த போட்டிகளின் எண்ணிக்கை 60-லிருந்து 74ஆக உயர்ந்துள்ளது. 2011ஆம் ஆண்டு 10 அணிகள் இடம்பெற்றிருந்தன. அந்த சீசனில் ஐந்து அணிகள் கொண்ட இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. அதே முறையை பிசிசிஐ கையாளும் என தெரிகிறது. புதிய அணிகள் வந்திருப்பதால் மெகா ஏலம் நடத்த திட்டமிட்டிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்துள்ளது. ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.