×

"யார் என்ன நினைத்தாலும் கவலையில்லை" - நச்சுனு பதிலடி கொடுத்த கோலி!

 

இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 டெஸ்ட், 3 ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. தென்னாப்பிரிக்காவின் கோட்டையான செஞ்சூரியனில் விராட் கோலி தலைமையிலான இந்திய படை கொடி நாட்டியது. 2021ஆம் ஆண்டு யாருக்கு எப்படியோ இந்திய அணிக்கு மிகச்சிறப்பாகவே அமைந்துள்ளது. ஆம் SENA எனப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் கோட்டைகளையும் தகர்த்து வரலாறு படைத்துள்ளது.

குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணிற்கே சென்று தொடரையும் கைப்பற்றியது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மேலும் தென்னாபிரிக்காவின் கோட்டையான செஞ்சூரியனிலும் மாபெரும் வெற்றி கண்டது. இச்சூழலில் கடந்த ஜன.3ஆம் தேதி இரண்டாம் டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பெர்க்கில் தொடங்கியது. இதில் விராட் கோலி தலைமையிலான அதே இந்திய அணி களமிறங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் ட்விஸ்ட்டாக கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கோலிக்கு முதுகுப்பிடிப்பு காரணமாக களமிறங்கவில்லை.

அவருக்குப் பதிலாக ஹனுமா விஹாரி களமிறங்கினார். எனினும் சிறப்பான பங்களிப்பை அவரால் கொடுக்க முடியவில்லை. அதேபோல மற்ற பேட்ஸ்மேன்களும் பெரியளவில் சாதிக்க முடியவில்லை. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய பவுலர்கள், 2ஆம் இன்னிங்ஸில் பெரிதாக சோபிக்க முடியவில்லை. குறிப்பாக பண்ட் மீது நிறைய விமர்சனம் எழுந்தது. அணி இக்கட்டான சூழலில் இருக்கும்போது வந்த முதல் பந்திலேயே அதிரடியாக ஆட நினைத்து விக்கெட்டை பறிகொடுத்தார். கோலி இருந்திருந்தால் தொடரையே வென்றிருக்கலாம் என ரசிகர்கள் விமர்சித்தனர்.


இச்சூழலில் இன்று கோலி பிரஸ்மீட்டில் பேசினார். அப்போது பேசிய அவர், "நான் முழு உடல் தகுதியுடன் இருக்கிறேன். நாளை தொடங்கும் 3ஆவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் கலந்துகொள்வேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. எனது ஆட்டத்தில் எனக்கு முழு மன திருப்தி உண்டு. வெளியே விமர்சனம் செய்பவர்களைப் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. அவர்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. ரிசப் பண்ட்டை பொறுத்தவரை தனது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு சிறப்பாக விளையாடுவார்” என்றார்.