×

#BREAKING சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கேன் வில்லியம்சன் ஓய்வு- ரசிகர்கள் அதிர்ச்சி

 

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் சர்வதசே கிரிக்கெட்டில் அனைத்து விதமான ஃபார்மெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், நவீன கிரிக்கெட்டின் புகழ்பெற்ற "Fab Four" வீரர்களில் ஒருவருமான கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதான அவர், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் நடுவிலேயே தனது முடிவை அறிவித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். கேன் வில்லியம்சனின் கிரிக்கெட் வாழ்க்கை போலவே, அவரது ஓய்வு அறிவிப்பும் அமைதியானதாகவும், எவ்வித ஆரவாரமுமின்றியும் வந்துள்ளது. பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்ட விடைபெறும் சுற்றுப்பயணங்களோ, உணர்ச்சிமிக்க பிரிவு விழாக்களோ இல்லாமல், இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மத்தியிலேயே அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு உடனடியாக விடை கொடுப்பதாக அறிவித்தார்.

இந்த முடிவு, கடந்த 16 ஆண்டுகளாக நியூசிலாந்து கிரிக்கெட்டில் அவர் படைத்த சாதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. தனது அற்புதமான பேட்டிங் திறமையால் நியூசிலாந்து கிரிக்கெட்டின் வரலாற்றையே மாற்றியமைத்த வீரர் வில்லியம்சன். ஏற்கனவே டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து விலகியிருந்த அவர், கடந்த வாரம் இங்கிலாந்து அணியிடம் ஏற்பட்ட மோசமான தோல்விக்குப் பிறகு, மீதமிருந்த தேசிய அணிப் பொறுப்புகளையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் உறுதியானதாக மாறியதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேன் வில்லியம்சன் கூறியதாவது,  “இந்த முடிவைப் பற்றி நான் நீண்ட நாட்களாக யோசித்து வந்தேன். ஆனால் கடந்த சில நாட்களில், இதுவே சரியான நேரம் என்பது தெளிவாகியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டிற்கான ஆர்வமும், நாட்டிற்காக விளையாடும் வேட்கையும் என்னுள் எப்போதும் இருந்தது. நியூசிலாந்துக்காக விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்திருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன். அதைவிட குறைவான அர்ப்பணிப்புடன் தொடர்வது சரியானதாக இருக்காது. எனது விருப்பத்திலேயே இந்த பயணத்தை முடிக்க முடிவது எனக்கு ஒரு அதிர்ஷ்டமாக கருதுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

கிரிக்கெட் உலகின் மிகவும் மதிக்கப்படும் பேட்ஸ்மேன்களில் ஒருவரான கேன் வில்லியம்சனின் ஓய்வு, நியூசிலாந்து கிரிக்கெட்டிற்கும் உலக கிரிக்கெட்டிற்கும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.