கே.எல். ராகுல் 3-ம் இடம்! – அப்போ கோலி? – ICC T20 தரவரிசைப் பட்டியல்
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. மூன்று டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2 போட்டிகளில் வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும் டி20 ஆட்டங்களில் ஓப்பனிங் வீரருமான கே.எல்.ராகுல் தனது சிறப்பான ஆட்டத்தை இந்த சீசனில் வெளிப்படுத்தினார். அதற்கான பலன் கிடைத்திருக்கிறது.
ஐசிசி தரவரிசைப்பட்டியலில் இந்த டி20 தொடருக்குப் பிறகு சில மாறுதல் நடைபெற்றுள்ளது.
உலகளவிலான டி20 போட்டிகளின் சிறந்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் 3-ம் இடத்தில் நிலைத்திருக்கிறார் இந்தியாவின் கே.எல்.ராகுல்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 9-ம் இடத்திலிருந்து 8-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த இருவர் மட்டுமே முதல் 10 இடங்களில் இடம்பிடித்த இந்திய வீரர்கள்.
ரோஹித் ஷர்மா 14-ம் இடத்திலும், ஷிகர் தவான் 19-ம் இடத்திலும் உள்ளனர்.
முதல் இடத்தில் இங்கிலாந்தின் டேவிட் மலனும் இரண்டாம் இடத்தில் பாகிஸ்தானில் பாபர் அஸாமும் உள்ளனர். ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் நான்காம் இடத்திலுள்ளார்.
டி20 பவுலிங்கில் முதல் பத்து இடங்களில் இந்திய வீரர்கள் எவரும் இல்லை. வாஷிங்டன் சுந்தர் 11-ம் இடம் பிடித்திருக்கிறார். பும்ரா 17-வது இடத்திலும், சஹல் 23-ம் இடத்திலும் உள்ளனர். ஆப்கான்ஸ்தானின் ரஷித் கான் முதல் இடத்தில் இருக்கிறார்.