×

நம்பவே முடியலயே... திடீரென கலக்கிய புஜாரா, ரஹானே... மீண்டும் தூள் கிளப்புவாரா ஷர்துல்?

 

இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 டெஸ்ட், 3 ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. தென்னாப்பிரிக்காவின் கோட்டையான செஞ்சூரியனில் விராட் கோலி தலைமையிலான இந்திய படை கொடி நாட்டியது. இச்சூழலில் இரண்டாம் போட்டி ஹோகன்ஸ்பெர்க்கில் கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. முதுகுப் பிடிப்பால் கோலி விலக, துணை கேப்டன் கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

கோலிக்குப் பதிலாக ஹனுமா விஹாரி களமிறக்கப்பட்டார். முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்தியா. கேஎல் ராகுலும் மயங்க் அகர்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாக வந்தனர். இவர்கள் இருவரும் தான் முதல் டெஸ்ட் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்கள். ஆனால் இம்முறை தென்னாப்பிரிக்க பவுலர்களின் கன்ட்ரோலுக்குள் சென்றுவிட்டனர். மயங்க் அகர்வால் 26 ரன்களிலேயே ஆட்டமிழக்க புஜராவும் ரஹானேவும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால் அணி இக்கட்டான சூழலுக்குள் சிக்கிக் கொண்டது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர் பவுலர்கள்.

இந்திய பேட்ஸ்மேன்களை ஆட்டம் காண வைத்தனர். கேஎல் ராகுல் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார். அதற்குப் பின் வந்ததில் அஸ்வினை தவிர யாரும் சரியாக விளையாடவில்லை. இதனால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்கள் எடுத்தது. அடுத்து வந்த தென்னாப்பிரிக்க அணியும் பெரிதாக சோபிக்கைவில்லை. கீகன் பீட்டர்சன், பவுமா அரைசதம் கடந்தனர். அவர்கள் தவிர யாரும் சிறப்பாக விளையாடவில்லை. இருந்தாலும் ஓரளவு வலுவான நிலையில் இருந்த தென்னாப்பிரிக்காவை தாக்கூர் நிலைகுலைய வைத்தார். ஆம் 7 விக்கெட்டுகளை சாய்த்து ஆச்சர்யப்படுத்தினார்.

தென்னாப்பிரிக்கா 229 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதற்குப் பின் ஆடவந்த இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் மறுபடியும் சொதப்பினார்கள். ஆனால் எப்போதும் சொதப்பக்கூடிய புஜராவும் ரஹானேவும் திடீரென பொறுப்பு வந்து ஆடி அரைசதம் அடித்தனர். இதனால் இந்தியா வலுவான நிலையில் இருக்கிறதோ என பேசிக் கொண்டிருக்கையிலேயே இருவரும் அடுத்தடுத்து அவுட்டாகினர். அவர்களுக்கு பிறகு வந்த ஹனுமா விஹாரி ஓரளவு சிறப்பாக ஆடினார். அதிரடி சூறாவளி பண்ட் டக் அவுட்டாகினார். அஸ்வினும் தாக்கூரும் அதிரடியாக ஆடினாலும் பெரிய ஸ்கோர்களை தொட முடியவில்லை.

விஹாரி மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. முடிவில் இந்தியா 266 ரன்கள் எடுத்திருந்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு 240 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது மார்க்ரமும் எல்கரும் ஆடி வருகின்றனர். இருவரும் இணைந்து 16 ரன்கள் எடுத்துள்ளனர். 10 விக்கெட்டுகள் எடுத்தால் இந்தியா வெற்றிபெறும். 240 ரன்கள் அடித்தால் தென்னாப்பிரிக்கா வெற்றிபெறும். அனைத்தும் இந்திய பவுலர்கள் கையில் தான் உள்ளது. அவர்களின் பந்துவீச்சை பொறுத்தே இந்தியாவின் வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படும்.