×

"ரூ.5 கோடிக்கு துபாய் வாட்ச் வாங்கினேனா?; அனைத்தும் பொய்" - பாண்டியா பரபர விளக்கம்!

 

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா லீக் சுற்றிலேயே வெளியேறியது. இதற்குப் பின் நியூஸிலாந்துடனான டி20 தொடர் இந்திய மண்ணில் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து இந்திய வீரர்களும் மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு சொந்த நாட்டிற்கு திரும்பினர். அதில் ஹர்திக் பாண்டியாவும் ஒருவர். இவர் துபாயிலிருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். 

அப்போது அவரிடமிருந்து விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் ரூ.5 கோடி மதிப்பிலான இரண்டு வெளிநாட்டு கைக்கடிகாரங்களைப் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியானது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார் பாண்டியா. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்னிடமிருந்து 2 கைக்கடிக்காரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் என்னிடம் இருந்தது ரூ.1.5 கோடி மதிப்பிலான ஒரேயொரு கைக்கடிகாரம் தான்.  விமான நிலையத்துக்கு வந்ததும் நானே முன்வந்து சுங்கத் துறை அதிகாரிகளிடம் சென்று கைக்கடிகாரம் குறித்து சொன்னேன்


ஆனால் நான் கைக்கடிகாரத்தை மறைத்துக் கொண்டு வந்ததுபோல் தகவல் வெளியானது. கைக்கடிகாரத்தை துபாயில் வாங்கினேன். அதற்கான வரியை நான் கட்ட தயாராகவே இருந்தேன். இதுதொடர்பான ஆவணங்களை அதிகாரிகளிடம் தந்துள்ளேன். அதற்கான சுங்க வரி மதிப்பீட்டை சொன்ன பிறகு நான் வரி செலுத்துவேன். நான் சட்டத்தை மதித்து நடப்பவன். எனவே நான் சட்டத்தை மீறிவிட்டதாக பரவும் தகவல்கள் அனைத்தும் பொய். நான் கொண்டுவந்த கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ.5 கோடி என்பதும் தவறானது” என்றார்.