×

"இனி ஐசிசி கமிட்டிக்கும் தலைவர் கங்குலி தான்" - தூள் கிளப்பும் தாதா!

 

பல்வேறு நாடுகளுக்கு தனித்தனி கிரிக்கெட் வாரியங்கள் இருக்கின்றன. இவையனைத்திற்கும் தலைமையாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இருக்கிறது. அது தான் ஐசிசி. இரு நாடுகளுக்கிடையேயான தொடரை நடத்துவது. உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற பெரிய பெரிய தொடர்களை நடத்துவது தான் இதன் வேலை. அதேபோல இரு நாடுகளுக்கிடையே பிரச்சினை வந்தாலும் மத்தியஸ்தம் செய்வதும் இதன் தலையாய பணி. 

ஐசிசியில் நிர்வாக கமிட்டி என ஒரு குழு உண்டு. இந்தக் குழுவில் உள்ளவர்கள் கிரிக்கெட் தொடர்பான விதிகளை வகுப்பார்கள். சமீபத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புதிய புதிய விதிகளை அறிமுகப்படுத்தியது இந்தக் குழு தான். அதேபோல டிஆர்எஸ் எனப்படும் கள அம்பயரின் முடிவை மூன்றாம் அம்பயரிடம் மறு பரிசீலனை செய்யக் கோருவது, பந்துவீச்சாளர்களின் பவுலிங் ஆக்சன் முறையாக உள்ளதா என்பதைப் பரிசோதிப்பது என அனைத்தையும் இக்குழு தான் பார்த்துக் கொள்ளும்.

ஐசிசி நிர்வாக கமிட்டியின் தலைவராக இருந்தவர் இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே. இவர் 2012ஆம் ஆண்டு இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவரின் செயல்பாடுகள் மிகச்சிறப்பாக இருந்ததால் 9 ஆண்டுகள் , அதாவது நேற்று வரை அவர் தான் தலைவர். தலைவர் பதவிக்காலம் 3 ஆண்டுகள்தான். இருப்பினும் கும்ப்ளே மூன்று முறை தலைவர் பதவியைத் தக்கவைத்தார். தற்போது அவர் தலைவர் பதவியிலிருந்து விலகிவிட்டார். அந்தப் பதவியை பிசிசிஐ தலைவர் கங்குலியைத் தேடிவந்துள்ளது. இருப்பினும் பிசிசிஐ தலைவராகவும் அவரே தொடர்வார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.