×

ஜோகோவிச்சிடம் மண்ணை கவ்விய ஆஸி., அரசு... வேக்சின் போடாமலேயே சாதித்தார்!

 

செர்பியா நாட்டைச் சேர்ந்தவர் நோவாக் ஜோகோவிச். இவர் உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர். ஆனால் வேக்சின் மீது நம்பிக்கையற்றவர். தடுப்பூசி போடுவதும் போடாததும் தன்னுடைய தனிப்பட்ட விருப்பம். அதில் யாரும் தலையிட கூடாது. கருத்து கூறக் கூடாது எனவும் நீண்ட நாட்களாகவே சொல்லி வருகிறார். இச்சூழலில் டென்னிஸ் உலகில் ஆண்டின் முதல் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் ஜனவரி 17ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். இதன் காரணமாக ஜோகோவிச் கலந்துகொள்வது கேள்விக்குறியானது.

எனினும் ஜோகோவிச்சுக்கு ஸ்பெஷல் விலக்கு கொடுத்தது செர்பிய நாட்டு அரசு. தடுப்பூசி செலுத்தாதற்கான மருத்துவ விதிவிலக்கு சான்றிதழ்களை வழங்கியது. இதனை வாங்கி கொண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கடந்த ஜனவரி 5ஆம் தேதி மெல்போர்ன் நகருக்குச் சென்றார். அப்போது ஆஸ்திரேலிய விமான நிலைய அதிகாரிகள் அங்கேயே வழிமறித்து தடுப்பூசி சான்றிதழை கேட்டுள்ளார்கள். ஆனால் அவரிடம் இல்லை. அவரை உள்ளே அனுமதிக்க அதிகாரிகள் மறுத்தனர்.

மேலும் ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள், அவரது விசாவை ரத்துசெய்து மெல்போர்னிலுள்ள ஒரு விடுதியில் தனிமைப்படுத்தி, தடுப்புக் காவலில் அடைத்தனர். கிட்டத்தட்ட ஒரு கைதியைப் போல அவரை ஆஸ்திரேலிய அரசு ட்ரீட் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. டென்னிஸ் ரசிகர்கள் பலரும் அரசை கடுமையாக விமர்சித்தார்கள். இதையடுத்து ஆஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தில் ஜோகோவிச் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணை முடிந்து நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

அதன்படி ஜோகோவிச்சின் விசாவை ரத்துசெய்த ஆஸ்திரேலிய அரசின் முடிவுக்கு நீதிபதி ஆண்டனி கெல்லி கடும் கண்டனம் தெரிவித்தார். அரசின் முடிவையும் ரத்துசெய்த அவர், ஜோகோவிச்சின் பாஸ்போர்ட், விசா, மற்ற ஆவணங்கள் அனைத்தும் உடனடியாக திரும்ப வழங்க வேண்டும் என ஆணையிட்டார். மேலும் தீர்ப்பு வெளியான 30 நிமிடங்களில் ஜோகோவிச்சை உடனடியாக விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆஸ்திரேலிய ஓபனில் கலந்துகொள்ளவும் அனுமதி வழங்கினார். 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார் ஜோகோவிச். இந்தாண்டு பட்டம் வென்றால், பெடரர், நடால் ஆகியோரை விட அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர் என்ற சாதனையை படைப்பார். ஆஸ்திரேலிய அரசையே சட்டப்போராட்டம் நடத்தி வென்றுவிட்டார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்வது அவ்வளவு கடினமான விஷயமாக அவருக்கு இருக்காது.