×

முதல் ஆளாக தோனியை தக்கவைத்தது சிஎஸ்கே... கொண்டாடும் ரசிகர்கள்!

 

சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஐபிஎல் போட்டி முடியும்போதும் அவர் எப்போது ஓய்வுபெறப் போகிறார் என்பதே பிரதான கேள்வியாக இருக்கிறது. அவர் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்ப்பவர்களுக்கு ஒரேயொரு வார்த்தையில் ஏமாற்றத்தையும் அவர்களின் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தையும் கொடுத்துவிடுகிறார் தல தோனி. அப்படி பேமஸானது தான் Definitely not என்ற வார்த்தை. கடந்தாண்டு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே படுதோல்வியைச் சந்தித்தது. எப்போதும் இல்லாத வகையில் ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக பிளேஆப் செல்லாமல் வெளியேறியது. 

இதனால் தோனி ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு இந்தப் பதிலை அளித்து ஷாக் கொடுத்தார். அணியைக் கட்டமைப்பதிலே தன் கவனம் இருக்கும் என்று சொன்ன அவர் ரசிகர்களுக்கு சத்தியமும் செய்தார். "We will come back stronger, that's is what we known for" (நாங்கள் மீண்டும் வலிமையுடன் திரும்பி வருவோம்; நாங்கள் கம்பேக்குக்கு பெயர் போனவர்கள்) என தோனி சொன்ன அந்த வார்த்தைகள் எவ்வளவு வலிமையானவை என்பதை இந்த சீசனில் நிரூபித்துக் காட்டிவிட்டார். ரசிகர்களுக்கு கோப்பையையும் பெற்றுக் கொடுத்துவிட்டார்.

 

அந்த வகையில் இறுதிப் போட்டிக்குப் பின் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, "அடுத்த வருடம் சிஎஸ்கேவுக்காக ஆடுவீர்களா” என கேட்டார். அதற்கு தோனி சிரித்துக்கொண்டே, "நான் ஏற்கெனவே சொன்னது போல அடுத்த சீசனில் 2 புதிய அணிகள் வருவதால், சிஎஸ்கே என்னை தக்கவைக்க வேண்டியதில்லை; இப்போது இருக்கும் வீரர்கள் 10 வருடங்களாக அணியை தாங்கிவந்துள்ளனர். அவர்களை தக்கவைப்பதில் சிஎஸ்கே கவனம் செலுத்தும். என்னை தக்கவைக்க வேண்டிய அவசியமில்லை” என்றார். அதற்கு ஹர்ஷா போக்லே, "இந்தக் கதையே வேண்டாம்" என கலாய்த்தார்.

அதற்குப் பிறகு தோனியிடம் போட்டு வாங்க ஒரு தூண்டில் போட்டார் ஹர்ஷா போக்லே. அவர் நினைத்தது போலவே தோனி மாட்டிவிட்டார். "இவ்வளவு வலிமையான அணியாக சிஎஸ்கேவை வழிநடத்தி, அதை இந்தச் சமயத்தில் விட்டுச் செல்வதை நினைத்து நீங்கள் பெருமைப்படலாம்” என்றார். உடனே தோனி சிரித்துக்கொண்டே "இன்னும் நான் சிஎஸ்கேவை விட்டு போகவே இல்லையே" என்றார். ஆக அவர் சிஎஸ்கேவுக்கு வரவிருக்கும் சீசனில் விளையாடுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியானது. தற்போது முழுவதுமாக உறுதியாகிவிட்டது. 

சிஎஸ்கே நிர்வாகம் தங்களுடைய முதல் ரிட்டெய்ன் கார்டை தோனியை தக்கவைப்பதில் பயன்படுத்தியுள்ளது. இந்தாண்டு சீசனில் மெகா ஏலம் நடக்கபோவதாலும் இரண்டு புதிய அணிகள் வருவதாலும் ஒவ்வொரு அணியும் 2 உள்ளூர் வீரர்கள், 1 வெளிநாட்டு வீரரை தக்கவைத்து கொள்ளலாம். முன்னர் இது 5ஆக இருந்தது. இதில் முதல் வீரராக தோனியை சிஎஸ்கே தக்கவைத்திருக்கிறது. கேப்டன் இல்லாமல் கப்பலை வழிநடத்த முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இன்னும் சில வருடங்கள் அவரை தக்கவைக்கும் எண்ணம் இருப்பதாகவும் சிஎஸ்கே தெரிவித்துள்ளது. இன்னும் இருவரில் யாரை தக்கவைக்க போகிறது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.