×

"இந்திய வீரர்கள் பீப் சாப்பிட தடை?" - பிசிசிஐ பரபரப்பு விளக்கம்!

 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வழக்கம். ஒவ்வொரு அறிவிப்பையும் மறைமுகமாக வெளியிட்டு எதிர்ப்புகள் எழுந்தால் அப்படியொரு அறிவிப்பை நாங்கள் வெளியிடவே இல்லையே என சத்தியம் செய்வார்கள். அதேபோல சிறப்பாக விளையாடிய வீரர்களை "பாலிட்டிக்ஸ்" காரணமாக இந்திய அணிக்குள் சேர்க்காமல் விட்டுவிடுவார்கள். நெட்டிசன்கள் திட்டித்தீர்த்த பின் மீண்டும் அந்த வீரரை அணிக்குள் கொண்டுவருவார்கள்.

அந்த வகையில் தற்போதைய ஹாட் டாபிக் இந்திய வீரர்களுக்கான புதிய டயட் பிளான். டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது. இதற்கு வீரர்களின் ஃபிட்னஸ் தான் காரணம் என பிசிசிஐ நம்புகிறது. ஆகவே அவர்களின் உணவு முறையை மாற்ற திட்டமிட்டதாகக் கூறப்பட்டது. அதன்படி புதிய உணவு முறையில் பன்றி மற்றும் மாட்டிறைச்சிக்கு பிசிசிஐ தடை விதித்ததாக ஒரு தகவல் பரவியது. மேலும் இஸ்லாமிய முறையான ஹலால் செய்யப்பட்ட இறைச்சியை மட்டுமே வீரர்கள் உட்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டதாகக் கூறப்பட்டது.


ஹலால் முறையில் விலங்கின் மூளைக்குச் செல்லும் உணர்ச்சி நரம்புகள் வெட்டப்படும். இதனால் வலி அதிகமில்லாமல் விலங்கு இறக்கும். இதோடு சேர்த்து ரத்தக்குழாயும் மூச்சுக்குழாயும் ஒரே நேரத்தில் வெட்டப்படுவதால், ரத்தம் அனைத்தும் வெளியேறிவிடும். ரத்தம் வெளியேறிவிட்டால் கிருமிகளால் இறைச்சி கெடாமல் இருக்கும். ஆனால் ஜாத்கா என்ற இந்து முறையில் ஒரே வெட்டில் விலங்குகள் துடிதுடித்து இறந்துவிடும். ஆகவே ஹலால் முறையை பிசிசிஐ பரிந்துரைத்தாகவும் கூறப்பட்டது.

இந்திய வீரர்கள் பெரும்பான்மையினர் இந்துக்கள் என்பதால் அவர்களுக்கு ஏன் இஸ்லாமிய ஹலால் உணவுகள் வழங்க வேண்டும் என பிசிசிஐயை நெட்டிசன்கள் திட்டி தீர்த்தனர். இதற்கு விளக்கமளித்துள்ள பிசிசிஐ, அப்படியொரு டயட் பிளான் தங்கள் தரப்பிலிருந்து வெளியாகவில்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளது. பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், "மீடியாக்களில் வெளியாகும் தகவலைப் போன்று பிசிசிஐ பீப், பன்றி இறைச்சிக்கு தடை விதிக்கவில்லை. வீரர்கள் அனைவரும் அவர்களுக்கு பிடித்த உணவைச் சாப்பிட முழு சுதந்திரமும் வழங்கியுள்ளோம்” என்றார். என்ன இருந்தாலும் நெருப்பின்றி புகையாது தானே.