×

"பேம்லி தான் ஃபர்ஸ்ட்" - கடுப்பில் கோலி திடீர் முடிவு... கெஞ்சும் பிசிசிஐ!

 

கோலி-பிசிசிஐ-ரோஹித் என்ற கூட்டணிக்குள் முக்கோண விரிசல் ஏற்பட்டுள்ளது. எப்போது வெடிக்கும் என தெரியவில்லை. ஆனால் பிசிசிஐ தரப்பிலிருந்து சொல்லப்படும் செய்திகள் எதுவும் ரசிக்கும்படியாக இல்லை. இது இந்திய அணியை அதலபாதாளத்தில் தள்ளக்கூடும் என சொல்லப்படுகிறது. கேப்டன்ஷிப்பில் கடும் எதிர்ப்புகளையும் விமர்சனங்களை எதிர்கொண்ட கோலி, டி20 உலகக்கோப்பையோடு கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதற்குப் பின் ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றார். 

டி20யில் விலகினாலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட்டில் கேப்டன் பொறுப்பில் இருப்பேன் என்பதில் தெளிவாக இருந்தார் கோலி. குறிப்பாக 2023ஆம் ஆண்டு 50 ஓவர் ஒருநாள் உலகக்கோப்பை வரை கேப்டனாக நீடிக்க விரும்பினார். ஆனால் பிசிசிஐ இப்படியெல்லாம் எங்களுக்கு ஒத்துவராது. டி20, ஒருநாள் இரண்டிலும் ஒரே கேப்டனிடமே இருக்க வேண்டும். ஆகவே ஒருநாள் கேப்டன் பொறுப்பையும் ரிசைன் செய்யுமாறு கோலி வற்புறுத்தியுள்ளது பிசிசிஐ. 48 மணி நேரமும் கெடு விதித்தது. ஆனால் கோலி தன் முடிவில் தீர்க்கமாக இருந்தார். 

பிடிவாதம் பிடித்ததால் பிசிசிஐயே அதிகாரத்தைக் கையிலெடுத்து அவரை நீக்கி ரோஹித் சர்மாவை கேப்டனாக்கியது. இதனால் கோலி கடும் அப்செட்டாகியுள்ளார். இதற்கு பழிவாங்கும் விதமாக பல முடிவுகளை கோலி எடுக்கப்போவதாக சொல்லப்படுகிறது. டெஸ்ட்டிலிருந்து ரோஹித்தை நீக்க கட்டம் கட்டி வருகிறார். காயம் காரணமாக ரோஹித் விலகவில்லை. கோலி தான் அதற்குக் காரணம் என கூறப்படுகிறது. அடுத்ததாக ரோஹித் தலைமையில் விளையாட விரும்பாத கோலி தென்னாப்பிரிக்கா உடனான ஒருநாள் தொடரில் விலக முடிவு செய்துள்ளார்.

அதற்குக் காரணம் அவரது மகள் வாமிகாவின் முதல் பிறந்தநாள் (ஜனவரி 11) தான் என்று சொன்னாலும், உண்மை காரணம் மேலே சொன்னது தான். தான் இல்லாமல் எப்படி அணி செயல்பட போகிறது என்பதை பிசிசிஐக்கு உணர்த்தவே இம்முடிவை எடுத்திருக்கிறார் என சொல்கிறார்கள். மகளின் பிறந்தநாள் சமயத்தில் தான் டெஸ்ட் முடிந்து ஒருநாள் தொடர் ஆரம்பமாகிறது. இதனால் பயோ பபுளிலிருந்து அவர் விலக நேரிடும். மீண்டும் தென்னாப்பிரிக்கா திரும்புவது சிரமம். ஆனால் பிசிசிஐ இந்த முடிவை கோலி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கெஞ்சியுள்ளது. இறுதி முடிவை கோலி இன்று அறிவிப்பார் என தெரிகிறது.