×

அதிரடி ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு

 

ஆஸ்திரேலிய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  

ஆரோன் பின்ச் முதன் முறையாக கடந்த 2011ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச அரங்கில் கால் பதித்தார். இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 278 ரன்னும், 146 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5406 ரன்களும் குவித்துள்ளார். இதேபோல் 103 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 3120 ரன்கள் அடித்துள்ளார். இதேபோல் 92 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 2091 ரன்கள் அடித்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற உலக சாதனைக்கு சொந்தக்காரர் பின்ச். இவர் அடித்த 172 ரன்களை இதுவரை யாரும் அடிக்கவில்லை. 

இதேபோல் கேப்டன் பொறுப்பிலும் சிறப்பாக செயல்பட்டு வந்தார் ஆரோன் பின்ச். இவர் ஆஸ்திரேலிய அணியை 76 டி20 மற்றும் 55 ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தி உள்ளார். ஆஸ்திரேலியா அணி ஒருநாள் உலகக்கோப்பை (2015) மற்றும் டி20 உலகக்கோப்பை (2021) வென்ற போது அணியில் அங்கம் வகித்தார். இதனிடையே கடந்த ஆண்டு அவர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் பெரும் விமர்சனத்திற்கு ஆளான அவர், தற்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.