×

டெஸ்டிலும் கோலிக்கு ஓய்வு... ரஹானே தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!

 

டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றிலேயே இந்தியா வெளியேறிவிட்டது. இதனால் இந்திய ரசிகர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்தக் காயத்திற்கு மருந்து போடுவதற்கு இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.  நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் தோற்றதே லீக் சுற்றோடு வெளியேறியதற்குக் காரணம். தற்போது அதே நியூஸிலாந்துடன் மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறவிருக்கின்றன.

 

இதில் டி20 போட்டிக்கான இந்திய வீரர்களை பிசிசிஐ ஏற்கெனவே அறிவித்துவிட்டது. டி20 உலகக்கோப்பையோடு கோலி கேப்டன் பதவியை விட்டு விலகினார். பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலமும் முடிந்தது. ஆகவே ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ராகுல் டிராவிட் புதிய பயிற்சியாளரானார். கேஎல் ராகுல் துணை கேப்டனாகிறார். கோலி, பும்ரா, ஜடேஜா, ஷமி ஆகிய மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டது. ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தற்போது நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதிலும் கேப்டன் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் போட்டியில் மட்டுமே இவர் கேப்டனாக இருப்பார். இரண்டாம் டெஸ்டில் கோலி வந்துவிடுவார். ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், ஷமி, பும்ரா ஆகியோருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. பிரசித் கிருஷ்ணா, கேஎஸ் பரத், ஜெயந்த் யாதவ் ஆகியோர் புதிதாக சேர்கப்பட்டுள்ளனர்.

முழு அணி விவரம்:

ரஹானே (கேப்டன்), கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, சுப்மன் கில், ஸ்ரேயாஷ் ஐயர், சஹா, கேஎஸ் பரத், ஜடேஜா, அஸ்வின், அக்‌ஷர் படேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகம்மது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.