×

"அவர ஏன் எடுத்தீங்க".. தொடங்கியது சர்ச்சை.. சிஎஸ்கேவை புறக்கணிக்கும் ரசிகர்கள்!

 

ஐபிஎல் 2022 சீசனுக்கான டிரெய்லர் என சொல்லப்படும் மெகா ஏலம் இரு நாட்களுக்கு முன்னர் பெங்களூருவில் நடைபெற்றது. ஏலம் என்று வந்துவிட்டால் சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது. அந்த சர்ச்சையில் இம்முறை சிக்கியிருப்பது சிஎஸ்கே அணி. பல வெற்றிகளை தேடித்தந்த சின்ன தல ரெய்னாவை அடிப்படை விலையில் கூட ஏலம் எடுக்கவில்லை என ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். சஹாருக்கூ 14 கோடி கொடுத்துவிட்டு "எல்லைச்சாமி" டுபிளெசிஸுக்கு 7 கோடிக்கு மேல் ஏலம் போக மாட்டீர்களா என ஆவேசமாக கேள்வியெழுப்பி வருகின்றனர்.

இந்த அதிருப்திகளோடு இலங்கை வீரர் மஹேஷ் தீக்‌ஷனாவை வாங்கியதும் தமிழ்நாட்டு சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 2013ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிஎஸ்கே எந்தவொரு இலங்கை வீரரையும் ஏலம் எடுக்கவில்லை. அதற்கு காரணம் ஈழ தமிழர்கள் மீதான இலங்கையின் போர். பல லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றுகுவித்தது இலங்கை. அந்நாட்டைச் சேர்ந்த ஒரு வீரர் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சென்னை அணிக்காக விளையாட கூடாது. அதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


இதனை எதிர்த்து ட்விட்டரில் #Boycott_ChennaiSuperKings என்ற ஹேஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர். மஹேஷ் தீக்‌ஷனாவை ஏலம் எடுத்த அன்றே பிரச்சினைகள் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது தான். அது ஏலம் முடிந்த 2 நாட்களில் ஆரம்பமாகிவிட்டது. தீக்‌ஷனாவை நீக்காவிட்டால் சிஎஸ்கேவை புறக்கணிப்போம் என ட்விட்டரில் பல்வேறு ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர். இதனை முன்வைத்து சிஎஸ்கே அணியும் ஐபிஎல் நிர்வாகமும் என்ன முடிவெடுப்பார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 


இம்முறை அனைத்து போட்டிகளும் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுவதால் சிஎஸ்கே கவனத்துடன் முடிவெடுக்கும். இம்மாதிரியான சர்ச்சை எழுவது இது முதன்முறையல்ல. ஒரு காலத்தில் இலங்கை வீரர்கள் சிஎஸ்கே அணியில் கோலோச்சி கொண்டிருந்தனர். முத்தையா முரளிதரன். சூரஜ் ரந்திவ் உள்ளிட்டோர் அணியின் முக்கியவத்துவம் வாய்ந்த வீரர்களாக இருந்தனர். ஆனால் இதனை தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதுகுறித்து 2013இல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார்.

அதில், "இலங்கை வீரர்கள், நடுவர்கள் என இலங்கையைச் சேர்ந்த யாரும் பங்கேற்கவில்லை என்றால் மட்டுமே சென்னையில் போட்டி நடத்த அனுமதியளிப்போம்” என்று குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பின்பே சிஎஸ்கே எந்தவொரு இலங்கை வீரரையும் ஏலம் எடுக்கவில்லை. அதேபோல 2018ஆம் ஆண்டு காவிரி விவகாரத்தின்போது சென்னை சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போது தமிழ்த்தேசிய அமைப்புகள், சிஎஸ்கே ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் பாப் டூபிளெசிஸ் மீது ஷூவையும் தூக்கி எறிந்தனர். இது அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.