×

அரையிறுதிக்கு முன்னேறுமா இங்கிலாந்து? - இலங்கையுடன் இன்று மோதல்

 

டி20 உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெறவுள்ள சூப்பர் 12 போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் குரூப்-1-ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப்2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரை இறுதிக்குள் நுழையும். இதுவரை நியூசிலாந்து அணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 

  
இந்நிலையில், இன்று நடக்கும் சூப்பர் 12 போட்டியில் குரூப்1 பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இதுவரை 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லை என  5 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற்றால் அரைஇறுதிக்கு முன்னேறி விடும். தோல்வி அடைந்தால் மூட்டையை கட்டும். அதே சமயம் 4 புள்ளியுடன் உள்ள (2 வெற்றி, 2 தோல்வி) தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை பறிகொடுத்து விட்டது. இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் அழுத்தம் இன்றி விளையாடுவார்கள். இந்த ஆட்டத்தில் இலங்கை வாகை சூடினால், இங்கிலாந்து வெளியேறுவது மட்டுமின்றி, ஆஸ்திரேலியாவுக்கு அரைஇறுதிக்கான கதவு திறக்கும். ஆகையால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.