×

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா..

 


உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில்,  ஈட்டி எறிதலில்  இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

அமெரிக்காவில்   ஓரிகான் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள்  நடந்து வருக்கின்றன. இதில் இந்தியா சார்பில் ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா மற்றும் ரோஹித் யாதவ் கலந்து கொண்டிருக்கின்றனர். தகுதி சுற்றில் சிறப்பாக  விளையாடி , இருவரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.  இந்நிலையில் ஈட்டி எறிதலில்  இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.  அதில்,  இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் எரிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.  ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.40 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.  

முன்னதாக நீரஜ் சோப்ரா,  டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஈட்டி எறிதலில்  தங்கம் வென்று அசத்தியிருந்தார்.  அதனைத்தொடர்ந்து  கடந்த மாதம் நடைபெற்ற சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.  தொடர்ந்து  நீரஜ் சோப்ரா , உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும்  சாதனை  படைப்பார் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.  அதன்படியே உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில்   இரண்டாவது இடத்துக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.  இந்தியா சார்பில் போட்டியிட்ட  மற்றொரு வீரரான ரோஹித் 10வது இடத்தைப் பிடித்தார்.

உலக தடகளப் போட்டியில் பதக்கம் வெல்லும் இரண்டாவது இந்திய வீரர் என்கிற பெருமையை பெற்றுள்ளார்  நீரஜ் சோப்ரா.  கடைசியாக கடந்த 2003 ஆம் ஆண்டு  அஞ்சு பாபி ஜார்ஜ்  வெண்கலம் வென்றிருந்தார்.  அதன்பிறகு யாரும் பதக்கங்கள் பெறவில்லை. இந்நிலையில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவுக்கு மீண்டும் ஓர் பதக்கம் கிடைத்திருக்கிறது.   இந்த வெற்றி மூலம் உலக தடகளப் போட்டியில் வெள்ளி வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் நீரஜ் பெற்றிருக்கிறார்.  அவருக்கு  பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.