×

பாகிஸ்தான் மகளிர் அணி கேப்டனின் குழந்தையுடன் இந்திய வீராங்கனைகள் செல்ஃபி

 

பாகிஸ்தான் மகளிர் அணி கேப்டனின் கைக்குழந்தையுடன், இந்திய வீராங்கனைகள் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகளிர் உலக கோப்பை போட்டியில், இந்திய மகளிர் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது. நியூசிலாந்து நாட்டின் மவுண்ட் மவுங்கானுய் பகுதியிலுள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலாவது பேட்டிங்கை தேர்வு செய்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பூஜா வஷ்ட்ரேகர் 67 ரன்களும், ஸ்னே ரானா 53 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 52 ரன்களும் எடுத்தனர்.


 
இதனையடுத்து 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 43வது ஓவரில் 137 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பக பந்துவீசிய இந்திய பவுலர், ராஜேஷ்வரி கெய்க்வாட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  

இதனிடையே போட்டி முடிவடைந்தவுடன் ட்ரெஸிங் ரூமுக்கு சென்ற இந்திய மகளிர் அணியினர், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பிஸ்மா மரூஃபின் கைக்குழந்தையுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது. இந்திய அணி போட்டியில் வென்றிருந்தாலும், உண்மையிலேயே அனைவரது உள்ளத்தையும் வென்றது அந்த குழந்தை தான் என அனைவரும் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் பரம எதிரியாக பாகிஸ்தான் இருந்தாலும், இரு அணிகளையும் ஒரு குழந்தை ஒன்றிணைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.