×

அரையிறுதிக்கு முன்னேறுமா இந்திய மகளிர் அணி - தெ.ஆப்ரிக்காவுக்கு 275 ரன்கள் இலக்கு

 

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி 274 ரன்கள் எடுத்துள்ளது. 

ஐசிசி மகளிர் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. கிறிஸ்ட் சர்ச் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியும், இந்திய அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவருமே அரைசதம் அடித்து அசத்தினர். 53 ரன்கள் எடுத்திருந்த போது ஷஃபாலி வர்மா ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய யாஷ்டிகா பாட்டியா 2 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனையடுத்து களமிறங்கிய மித்தாலி ராஜ், ஸ்மிருதி மந்தனாவுடன் ஜோடி சேர்ந்து அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றார். ஸ்மிருந்தி மந்தனா 71 ரன்களில் வெளியேறிய நிலையில், மித்தாலி ராஜ் 68 ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக களமிறங்கிய ஹர்மன்பிரீத் கவூர் 48 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற வீராங்கணைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியாக இந்திய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங்கை தொடங்கி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்பதால் இந்த போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.