×

தொடர் வெற்றிகள்..6 ஆண்டுக்கு பின் மீண்டும் முதலிடம் - ரோஹித் தலைமையில் மீண்டெழுகிறதா இந்தியா?

 

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.   முதலில் ஒருநாள் தொடர் ஆரம்பமானது. மூன்று போட்டிகள் நடைபெற்றது. மூன்றிலும் வென்ற இந்திய அணி வாஷ்அவுட் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியை வாஷ்அவுட்டாக்கிய முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார். இதையடுத்து டி20 தொடர் ஆரம்பமானது. முதல் போட்டி பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெற்றது. இந்தியாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் திணறினர்.

157 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்திருந்தது. இதன் காரணமாக இந்தியா மிக எளிதாக வெற்றி கண்டது. இரண்டாம் போட்டி கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. இந்த முறை பேட்டிங்கில் அமர்களப்படுத்தியது இந்தியா. கோலியும் ரிஷப் பண்ட்டும் அரைசதம் எடுத்ததால் 186 ரன்கள் குவித்தது. இந்த இமாலய இலக்கை எட்டிப்பிடிக்க வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கடுமையாக போராடினர். ஆனால் டெத் ஓவர்களில் இந்திய பவுலர்கள் மிகச் சிறப்பாக பந்துகளை வீசி இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். 

இச்சூழலில் மூன்றாம் போட்டி நேற்று நடைபெற்றது. நீண்ட நாட்களாக பயோ-பபுளில் இருந்ததால் கோலி, பண்ட்டுக்கு ஓய்வு வழங்கப்பட்டது. இதன் காரணமாக ருதுராஜ், ஸ்ரேயாஷ் ஐயர் ஆகியோர் பிளேயிங் 11இல் இணைந்தனர். அதேபோல புவனேஸ் குமாருக்கு பதிலாக ஆவேஸ் கான் சஹாலுக்கு பதிலாக ஷர்துல் சேர்க்கப்பட்டனர். முதலில் பேட்டிங் ஆடிய ந்தியா நிதானமாக ஆடியது. ஆனால் கடைசி 5 ஓவர்களில் சூர்யகுமார் யாதவ்வும் வெங்கடேஷ் ஐயரும் வெஸ்ட் இண்டீஸை பந்தாடினர். இதனால் 184 ரன்கள் எடுத்தது. எதிர்த்து ஆட வந்த வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களும் ருத்ர தாண்டவமாடினர்.

ஆனால் துரதிருஷ்டவசமாக அடுத்தடுத்து அவுட்டாகி விட்டதால் 167 ரன்கள் மட்டுமே அவர்களால் எடுக்க முடிந்தது. வழக்கம் போல டெத் ஓவர்களில் கட்டுக்கோப்பாக பந்துவீசி வெற்றியை இந்தியா வசப்படுத்தியது. இதன்மூலம் மூன்றாவது முறையாக வெஸ்ட் இண்டீஸை டி20 தொடரில் வாஷ்-அவுட் செய்தார் கேப்டன் ரோஹித் சர்மா. இந்த தொடர் வெற்றியின் காரணமாக ஐசிசி டி20 தரவரிசையில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்தது. 6 ஆண்டுகளுக்குப் பிறகு முதலிடம் பிடித்துள்ளது. முன்பாக அப்போதைய கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி 2016 பிப் முதல் மே வரை முதலிடத்தில் நீடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.