×

ரூ.12.25 கோடிக்கு விலைபோன ஸ்ரேயாஷ் ஐயர்... கேகேஆர் அணியின் கேப்டனாகிறாரா? 

 

ஐபிஎல் திருவிழா கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி கொண்டிருக்கிறது. அதன் டிரெய்லராக இன்று மெகா ஏலம் பெங்களூருவில் தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் 590 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த சீசனில் கூடுதலாக இரண்டு அணிகள் வேறு சேர்க்கப்பட்டிருப்பதால் மெகா ஏலத்தில் நிச்சயம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இரண்டு புதிய அணிகளும் அணியைக் கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அதேபோல ஆர்சிபி, கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளும் கேப்டனை தேட வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தன.

இதனால் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது என்றே சொல்லப்பட்டது. கேப்டன் வீரர்களை எடுப்பதில் இந்த மூன்று அணிகளும் முனைப்பு காட்டும் என எதிர்பார்த்தது தான். அப்படியான வீரர்களில் ஸ்ரேயாஷ் ஐயர் முக்கியமானவர். அவர் ஏற்கெனவே டெல்லியை அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தியவர். இதனால் இவர் ஏலத்தில் பெரிய விலைக்கு போவார் என கூறப்பட்டது. ஏலம் நடைபெறுவதற்கு முன்னர் அவரை பெங்களூரு அணி ரூ.20 கோடி கொடுத்தாவது ஏலத்தில் எடுக்க தயாராக இருப்பதாக தகவல் வெளியானது.

நினைத்தது போலவே கொல்கத்தா அணிக்கும் ஆர்சிபிக்கும் கடும் போட்டி நிலவியது. பஞ்சாப் தவானை ரூ.8.25 கோடிக்கு ஏலம் எடுத்துவிட்டதால் ஐயர் மீது ஆர்வம் காட்டவில்லை. இறுதியில் ரூ.12.25 கோடிக்கு ஸ்ரேயாஷ் ஐயரை கொல்கத்தா அணி விலைக்கு வாங்கியது. முன்னாள் கேப்டன் மோர்கனை ஏற்கெனவே கழற்றிவிட்டதால் ஸ்ரேயாஷ் ஐயர் தான் கேகேஆர் அணியை வழிநடத்துவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆல்ரவுண்டர் கம்மின்ஸை ஏலத்தில் விட்டு குறைந்த தொகையில் எடுக்கலாம் என்று நினைத்தது. அதே மாதிரி அவரை ரூ.7.25 கோடிக்கு எடுத்து ரூ.8 கோடி மிச்சம் செய்தது கேகேஆர். கடந்த முறை ரூ.15.5 கோடிக்கு எடுத்திருந்தது.