×

இலங்கையை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து

 
டி20 உலக கோப்பை போட்டியில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. 
   
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில், இன்று நடக்கும் சூப்பர் 12 போட்டியில் குரூப்1 பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன் காரணமாக இலங்கை அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய இலங்கை அணி, இறுதியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியாக இலங்கை அணி 20 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பதும் நிசாங்கா 67 ரன்கள் எடுத்தார்.  
 
இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது. தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஜாஸ் பட்லர் 28 ரன்னும், அலெக்ஸ் ஹேல்ஸ் 47 ரன்னும் எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் நிதானமாக ஆடினார். ஆனால் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் இலங்கையின் சுழலில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். எனினும் பொறுப்புடன் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 44 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். இறுதியில் இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் இலக்கை கடந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 2வது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது. இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதன் காரணமாக நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது.