×

பாரா துப்பாக்கிச் சுடும்  உலகக்கோப்பை போட்டி : தங்கம்  வென்று, உலக சாதனை படைத்த இந்திய வீராங்கனை..

 

  பாரா துப்பாக்கி சுடும் உலக கோப்பை போட்டியில் தங்கம் வென்று அசத்திய இந்திய வீராங்கனை அவனி லெகரா , புதிய  உலக சாதனையையும் படைத்திருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதே ஆன  வீராங்கனை அவனி. லெகரா.  கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த கார் விபத்து ஒன்றில் சிக்கி  முதுகுத்தண்டு வ ட பாதிப்பால் மாற்றுத்திறனாளி ஆனவர்.   பின்னர் 2015ஆம் ஆண்டு ஜெய்ப்பூரில் உள்ள விளையாட்டு மையத்தில் இணைந்து ,  தந்தையின் ஊக்குவித்ததன்  பேரில்  பயிற்சியைத் தொடங்கிய அவனி , துப்பாக்கி சுடுதல் மற்றும் வில் வித்தை  இரண்டிலுமே  வல்லவரானார்.  தொடர்ந்து பல சர்வதேச போட்டிகளில் விளையாடி வந்த அவர்,   டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.  

இந்த நிலையில் பிரான்ஸில் நடைபெற்று வரும் பாரா துப்பாக்கிச் சூடும் உலக கோப்பை போட்டியில் அவனி லெகரா,  தங்கம் வென்று அசத்தி இருக்கிறார்.  அத்துடன் புதிய உலக சாதனையையும் படைத்திருக்கிறார்.  பெண்கள் R2- 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ். ஹெச் 1 பிரிவில் பங்கேற்ற அவனி,  இதற்கு முன்னதாக தான் நிகழ்த்திய தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார்.   முன்னதாக 249.6 என்கிற புள்ளிகளை பெற்று சாதனை படைத்திருந்த அவர்,   தற்போது 250. 6 புள்ளிகள் பெற்று அவரது சாதனையை முறியடித்திருக்கிறார்.   இந்த சாதனை மூலம் அவர் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கவும்  தகுதி  பெற்றுள்ளார்.

முன்னதாக பிரான்சில் நடைபெற்ற இந்த போட்டியில் பங்கேற்க அவரது பயிற்சியாளருக்கு விசா கிடைக்காத காரணத்தால், அவனி லெகரா போட்டியில் கலந்து கொள்ள முடியாத என்கிற சூழல் நிலவியது.   பின்னர் இந்திய அரசு தலையிட்டு அந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு அவனி போட்டியில் கலந்து கொண்டார். தனது தொடர் முயற்சியின் பலனாக இந்தியாவுக்காக  தங்கப் பதக்கத்தையும் வென்று அசத்தியிருக்கிறார் அவனி.  இந்த சர்வதேச  பாரா துப்பாக்கி சுடும் போட்டியில் போலந்து நாட்டைச் சேர்ந்த எமிலியா பாப்ஸ்கா  வெள்ளிப் பதக்கத்தையும்,  ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த அன்னா  நார்மன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.