×

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியிலும் நுழைந்த கொரோனா... முக்கிய வீரர்கள் திடீர் விலகல்!

 

கொரோனா முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை தான் இந்தியாவை சின்னாபின்னமாக்கியது. குறிப்பாக தலைநகர் டெல்லி படாத பாடுபட்டது. டெல்லியின் நிலையைக் கண்டு வருத்தப்படுவதா தங்கள் மாநிலத்தில் நடப்பதைக் கண்டு வருத்தப்படுவதா என தெரியாமல் பெரும்பாலான மாநில அரசுகள் புலம்பின. அந்தளவிற்கு டெல்லியை உலுக்கி எடுத்தது டெல்டா கொரோனா. தற்போது வந்திருப்பதோ ஒமைக்ரான். இந்த கொரோனா டெல்டாவை விட அதிவேகமாகப் பரவக்கூடியது.

நினைத்ததை விட வேகமாகப் பரவி மூன்றாம் அலையையும் உருவாக்கிவிட்டது. இதனால் டெல்லியிலுள்ள அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டிக்குள்ளும் கொரோனா தலைகாட்டியுள்ளது. இந்திரா காந்தி உள்ளரங்கு மைதானத்தில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 2ஆவது சுற்றுக்கு பி.வி.சிந்து, கிதாம்பி ஸ்ரீகாந்த், லக்கயா சென், சாய்னா நேவால் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

இச்சுழலில் நேற்று நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் பேட்மிண்டன் வீரர்கள் கிடம்பி ஸ்ரீகாந்த், அஸ்வினி பொன்னப்பா, ரித்திகா ராகுல், ட்ரீஸா ஜோலி, மிதுன் மஞ்சுநாத், சிம்ரன் அமன் சிங், குஷி குப்தா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை இந்திய பேட்மிண்டன் கூட்டமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதன் காரணமாக இவர்கள் அனைவரும் போட்டித் தொடரிலிருந்து பாதியிலேயே விலகியுள்ளனர். இரட்டையர் பிரிவில் இவர்களுடன் இணைந்து விளையாவிருந்தவர்களும் விலகிவிட்டனர்.

சிக்கி ரெட்டி, துருவ் கபிலா, காயத்ரி கோபிசந்த், அக்சான் ஷெட்டி, காவ்யா குப்தா ஆகியோரும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். கொரோனா பரவலைக் காரணம் காட்டி இங்கிலாந்தைச் சேர்ந்த அனைத்து வீரர், வீராங்கனைகளும் போட்டித் தொடரிலிருந்து விலகியுள்ளனர். பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகள் நடத்தப்பட்டும் எப்படி கொரோனா நுழைந்தது என்பது இந்திய பேட்மிண்டன் கூட்டமைப்பினர் விழிபிதுங்கி போயுள்ளனர். உலக சாம்பியன்கள் விளையாடுகிறார்கள் என்பதால் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.