×

வடக்குப் பொய்கை நல்லூர் கோரக்கர் சித்தர் ஜீவ சமாதியில் சிறப்பு வழிபாடு!

வடக்குப் பொய்கை நல்லூரில் ஜீவ சமாதி அடைந்த கோரக்க சித்தர் பிறந்த தினத்தினை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நாளை நடைபெற உள்ளது. கொல்லிமலையில் நெடுந்தவம் இருந்த சித்தர் மச்சேந்திரர் என்ற மச்சமுனி ஒரு நாள் அங்கிருந்து புறப்பட்டு பொதிய மலை செல்லும் விருப்பத்துடன் தென்திசைநோக்கிப் பயணித்தார். வழி நடையில் சம்பல்பட்டி என்ற ஓர் சிற்றூரில் அவருக்கு தாகம் எடுத்தது. அங்கிருந்து ஓர் இல்லத்தில் சென்று குரல் கொடுத்து நின்றார். அந்த இல்லத் தலைவன் சிவராம தீட்சிதர் அப்போது
 

வடக்குப் பொய்கை நல்லூரில் ஜீவ சமாதி அடைந்த கோரக்க சித்தர் பிறந்த தினத்தினை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நாளை நடைபெற உள்ளது.

கொல்லிமலையில் நெடுந்தவம் இருந்த சித்தர் மச்சேந்திரர் என்ற மச்சமுனி ஒரு நாள் அங்கிருந்து புறப்பட்டு பொதிய மலை செல்லும் விருப்பத்துடன் தென்திசைநோக்கிப் பயணித்தார்.

வழி நடையில் சம்பல்பட்டி என்ற ஓர் சிற்றூரில் அவருக்கு தாகம் எடுத்தது. அங்கிருந்து ஓர் இல்லத்தில் சென்று குரல் கொடுத்து நின்றார்.

அந்த இல்லத் தலைவன் சிவராம தீட்சிதர் அப்போது வீட்டில் இல்லை. அவரது மனைவி மட்டுமே இருந்தார். சிவனடியார் என்பது தெரிந்து, நீர் மட்டுமே கேட்ட அவரை வீட்டுக்குள் அழைத்து  இலை போட்டு பசியும் தாகமும் தீர்த்து பணிந்து வணங்கினார்.

உபசரிப்பில் மனம் குளிர்ந்தவராக, அம்மையாரை வாழ்த்திய மச்சமுனி சித்தர், அம்மையாரின் முகத்தில் சோகத்தைக் குறிப்பால் உ ணர்ந்தார். ‘உன் வாழ்வில் ஏதோ ஒரு பெரும் குறை.

அது என்ன தாயே என்று வினவினார். தயங்கியபடி அவரும் தன் வாழ்வில் எல்லா வளநலமும் இருந்தும் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் கூறினார்.

தன் இடையில் இருந்த திருநீற்றை எடுத்த மச்சேந்திரர், அதை ஒரு பச்சிலையில் வைத்து வழங்கி “அம்மையே! உன் கணவனுடன் நீராடி சிவத்தியானம் செய்து இந்தக் கவசத் திருநீற்றினை இருவரும் அணிந்து வணங்குங்கள் எஞ்சியதை தூய நீரில் இட்டுப் பருகுங்கள்.

உங்கள் நெடுநாள் குறை விரைவில் நீங்கும். பரமஞானி ஒருவன் உங்களுக்கு மகவாக வந்துதிப்பான்! என ஆசீர்வதித்து விட்டு பொதிகை மலை நோக்கி தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

பிறகு சிவராம தீட்சிதரின் துணைவியார் நீராடச் சென்றார். நீராடுவதற்கு உடன் வந்த பெண்களிடம், சிவனடியார் கொடுத்த கவசத் திருநீறு பற்றிய விஷயத்தைக் கூறினார்.

அதைக் கேட்ட அந்தப் பெண்கள், ”கண்டவன் தரும் திருநீற்றை அணியாதே என எச்சரிக்கின்றனர். பயந்துபோன அம்மையார் அடுப்பு நெருப்பில் மச்சேந்திரர் கொடுத்த திருநீற்றைப் போட்டு விட்டார். பத்து ஆண்டுகள் உருண்டோடின.

பொதியமலை சென்று மச்சமுனி அவர்கள் திரும்பி குப்பை மேட்டில் கொட்டப்பட்ட விபூதியில் இருந்து கோரக்கரை உயிர் பித்து தந்தார் என்பது வரலாறு ஆகும்.
பின்னர் சித்துகள் பல பயின்று கோரக்கர் பல்வேறு தரப்பட்ட மக்களுக்கும் உதவிகள் செய்து வந்தார். பின்நாளில் வடக்குப் பொய்கை நல்லூரி ஜீவ சமாதி அடைந்தார் கோரக்கர்.

வடக்குப்பொய்கை நல்லூரில் உள்ள கோரக்கர் சித்தர் சமாதியில் நாள்தோறும், இரவில் அடியவர்களுக்கு அன்னம் பாலிக்கும் ஒரு வித்தியாசமான சம்பிரதாயம் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

இரவு 7 மணியளவில் ஆசிரமத்தின் தலைமைப் பூசாரி, தன் தோளில் ஓர் அன்னக் காவடியை சுமந்தபடி வடக்குப்பொய்கை நல்லூரின் வடக்கு மற்றும் தெற்கு வீதிகளில் வலம் வருவார்.

காவடியின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு பெரிய பானைகள் உரியில் தொங்கும். பூசாரி அன்னக்காவடி தர்மம் தாயே! என வீட்டு வாசலில் நின்றபடி குரல் கொடுப்பார். அங்கு வசிக்கும் எல்லா குடும்பத்தினரும் அன்னக்காவடியில் பக்தி சிரத்தையுடன் அன்னம் பாலிக்கின்றனர்.

சுத்தான்னம் எனப்படும் சுடுசோற்றை சுமந்து வரும் அன்னக்காவடி ஆசிரமம் சென்ற பின் கோரக்கர் சித்தருக்கு இரவு பூசை நடைபெறுகிறது. அப்போது நகரா ஒலிக்கப்படுகிறது. அதைக் கேட்ட பின்பே ஊர்மக்கள் தங்கள் இல்லங்களில் இரவு உணவு உண்ணுகின்றனர்.

பூசை செய்த சுத்தான்னம் அடியவர்களுக்கு இரவு உணவாக வழங்கப்படுகிறது.இந்த இரவு உணவை உண்ணும் வாய்ப்பு பெற்றவர்கள் பாக்கியசாலிகள் என்கின்றனர். இதை உண்ணும் உணவாக மட்டுமின்றி பல நோய்களைத் தீர்க்கும் மருந்தாகவும் நம்பி வருகின்றனர், கோரக்கரின் பக்தர்கள்.

வடக்குப் பொய்கை நல்லூரின் இதயப்பகுதியாக அமைந்துள்ளது கோரக்கரின் ஜீவ சமாதி பீடம். சித்தர் கோரக்கரின் ஜீவசமாதி பீட லிங்கத்தின் முன் கண்மூடி சில நிமிடங்கள் தியானிக்கும் போதே உடலும் மனமும் மிக லேசாவதை உணர முடியும்.

இதுவே ஜீவ சமாதி பீடங்களின் அதிர்வலை தரும் ஆனந்தம் ஆகும்.நாகையிலிருந்து வேளாங்கண்ணி செல்லும் சாலையில் 2கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வடக்குப் பொய்கை நல்லூர். இங்குதான் கோரக்கச் சித்தர் ஜீவசமாதி கொண்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மெய்யன்பர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.